இலங்கைக்கு எதிரான 2வது டி20 – ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 5 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டி கொண்ட தொடர்களில் விளையாடுகிறது. முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியா 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், இரு அணிகள் மோதும் 2வது டி20 கிரிக்கெட் போட்டி கொழும்பில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட் செய்த இலங்கை அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் எடுத்தது. அசலங்கா 39 ரன்னும், குசால் மெண்டிஸ் 36 ரன்னும் எடுத்தனர். ஆஸ்திரேலியா சார்பில் கேன் ரிச்சர்ட்சன் 4 விக்கெட், ஜேய் ரிச்சர்ட்சன் 3 விக்கெட், மேக்ஸ்வெல் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 125 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஆரோன் பின்ச் 24 ரன்னும், டேவிட் வார்னர் 21 ரன்னும் எடுத்தனர். கடைசி கட்டத்தில் மேத்யூ வேட் பொறுப்புடன் ஆடி 26 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பெற வைத்தார்.
இறுதியில், ஆஸ்திரேலிய அணி 17.5 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 126 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா டி20 தொடரை 2-0 என கைப்பற்றியுள்ளது.