Tamilவிளையாட்டு

இலங்கைக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி – ஜிம்பாப்வே வெற்றி

ஜிம்பாப்வே அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி பல்லெகலேவில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 302 ரன்கள் குவித்தது. எர்வின் 91 ரன்னும், சிக்கந்தர் ரசா 56 ரன்னும் எடுத்தனர். சீன் வில்லியம்ஸ் 48 ரன்னும், சகாப்வா 47 ரன்னும் எடுத்து அவுட்டாகினர்.

இலங்கை சார்பில் ஜெப்ரி வாண்டர்சே 3 விக்கெட்டும், நுவான் பிரதீப் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 303 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. 63 ரன்களை எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

அடுத்து இறங்கிய தாசன் ஷனகா நிதானமாக ஆடி சதமடித்தார். மெண்டிஸ் அரை சதமடித்தார். 5வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 118 ரன்கள் சேர்த்தது. மெண்டிஸ் 57 ரன்னில் அவுட்டானார். தாசன் ஷனகா சதமடித்து 102 ரன்னில் அவுட்டானார். அடுத்து வந்த வீரர்கள் விரைவில் வெளியேறினர்.

இறுதியில், இலங்கை அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 280 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் ஜிம்பாப்வே அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், தொடரை 1-1 என சமன் செய்துள்ளது.

ஜிம்பாப்வே சார்பில் சதாரா, முசாபராபானி தலா 3 விக்கெட் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருது ஜிம்பாப்வே வீரர் கிரெய்க் எர்வினுக்கு வழங்கப்பட்டது.