இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் – 2ம் நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 6/113
வெஸ்ட் இண்டீஸ் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
இரு அணிகளுக்கு முதல் டெஸ்ட் கல்லெயில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த இலங்கை அணி முதல் நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 267 ரன்கள் எடுத்திருந்தது. கருணரத்னே 132 ரன்னும், டி சில்வா 56 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். நிசங்கா அரை சதமடித்து 56 ரன்னில் வெளியேறினார்.
இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. டி சில்வா 61 ரன்னில் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து கருணரத்னே 147 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய சண்டிமால் 45 ரன்னில் ஆட்டமிழந்தார். இறுதியில், இலங்கை அணி 133.5 ஓவரில் 386 ரன்னில் ஆல் அவுட்டானது.
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ரோஸ்டன் சேஸ் 5 விக்கெட்டும், வாரிகன் 3 விக்கெட்டும், காப்ரியல் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரரும், கேப்டனுமான பிராத்வெயிட் 41 ரன் எடுத்து வெளியேறினார். அடுத்து வந்த வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.
எனவே, இரண்டாம் நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 113 ரன்கள் எடுத்து திணறி வருகிறது. கைல் மேயர்ஸ் 22 ரன்னும், ஜேசன் ஹோல்டர் ஒரு ரன்னுடனும் அவுட்டாகாமல் உள்ளனர்.
இலங்கை அணி சார்பில் மெண்டிஸ் 3 விக்கெட், ஜெயவிக்ரமா 2 விக்கெட் வீழ்த்தினர்.