இலங்கை-வங்காளதேச அணிகள் இடையிலான 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பல்லகெலேயில் நடந்து வருகிறது.
இதில் முதலில் பேட் செய்த வங்காளதேச அணி முதல் நாளில் நஜ்முல் ஹூசைன் ஷன்டோ சதமடித்து அசத்தினார். அவருக்கு கேப்டன் மொமினுல் ஹக் பக்கபலமாக இருந்து அரை சதமடித்தார். முதல் நாளில் 2 விக்கெட்டுக்கு 302 ரன்கள் எடுத்திருந்தது.
நேற்று முன்தினம் நடந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில் மொமினுல் ஹக் சதத்தை எட்டினார். டெஸ்ட் போட்டியில் அவர் அடித்த 11-வது சதம் இதுவாகும். வெளிநாட்டு மண்ணில் அவரது முதல் சதம் இது என்பது குறிப்பிடத்தக்கது. நிலைத்து நின்று ஆடிய நஜ்முல் ஹூசைன் ஷன்டோ 163 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
3-வது விக்கெட்டுக்கு நஜ்முல் ஹூசைன்-மொமினுல் ஹக் ஜோடி 242 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது. அவரை தொடர்ந்து மொமினுல் ஹக் 127 ரன்னில் ஆட்டமிழந்தார்.
மழையால் ஆட்டம் சில மணி நேரம் பாதிக்கப்பட்டதுடன், போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் முன்கூட்டியே முடித்து கொள்ளப்பட்டது. இரண்டாம் நாள் முடிவில் வங்காளதேச அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 474 ரன்கள் குவித்திருந்தது. முஷ்பிகுர் ரஹிம் 43 ரன்னுடனும், லிட்டான் தாஸ் 25 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் நேற்று நடந்தது. லிட்டன் தாஸ் அரை சதமடித்து ஆட்டமிழந்தார். ரஹும் அரை சதமடித்து 68 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இறுதியில் வங்காளதேசம் அணி 7 விக்கெட் இழப்புக்கு 541 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
இலங்கை சார்பில் விஷ்வா பெர்னாண்டோ4 விக்கெட் வீழ்த்தினார்.
இதைத்தொடர்ந்து இலங்கை அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக திமுத் கருணரத்னே, லஹிரு திரிமானே களமிறங்கினர்.
இருவரும் நிதானமாக ஆடி அரை சதமடித்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 114 ரன்கள் சேர்த்தது. அரை சதமடித்த திரிமானே அவுட்டானார். அடுத்து இறங்கிய ஒஷடா பெர்னாண்டோ 20 ரன்னிலும், ஏஞ்சலோ மேத்யூஸ் 25 ரன்னிலும் வெளியேறினர்.
மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் இலங்கை அணி 3 விக்கெட் இழப்புக்கு 229 ரன்கள் எடுத்துள்ளது. கருணரத்னே 85 ரன்னுடனும், தனஞ்செய டி சில்வா 26 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.