Tamilவிளையாட்டு

இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி – வங்காளதேசம் வெற்றி

வங்காளதேசம்- இலங்கை அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி நேற்று வங்காளதேசம் சட்டோகிராமில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 48.5 ஓவரில் 255 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. ஜனித் லியானகே அதிகபட்சமாக 66 பந்தில் 67 ரன்கள் சேர்த்தார்.

விக்கெட் கீப்பரும் பேட்ஸ்மேனுமான குசால் மெண்டிஸ் 75 பந்தில் 59 ரன்கள் எடுத்தார். வங்காளதேச அணி சார்பில் ஷொரிபுல் இஸ்லாம், தஸ்கின் அகமது, தன்ஜிம்ஹசன் ஷாகிப் ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். பின்னர் 256 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேசம் அணி களம் இறங்கியது. தொடக்க வீரர் லிட்டோன் தாஸ் ரன்ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரர் சவுமியா சர்கார் 3 ரன்னில் வெளியேறினார்.

ஆனால் கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷான்டோ அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தவ்ஹித் ஹ்ரிடோய் (3), மெஹ்முதுல்லா (37) ஆட்டமிழந்த நிலையில் ஷான்டோ உடன் முஷ்பிகுர் ரஹிம் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமாக விளையாடி அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றது.

ஷான்டோ 122 ரன்கள் எடுத்தும், ரஹிம் 73 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழக்காமல் இருக்க வஙகாளதேசம் அணி 44.4 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 257 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஷான்டோ- முஷ்பிகுர் ரஹிம் ஜோடி 165 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.

இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என வங்காளதேச அணி முன்னிலைப் பெற்றுள்ளது. 2-வது டி20 போட்டி 15-ந்தேதியும், 3-வது மற்றும் கடைசி போட்டி 18-ந்தேதியும் நடைபெறுகிறது.