Tamilவிளையாட்டு

இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டி – இந்தியா வெற்றி

இந்தியா- இலங்கை அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. முதலில் ஆடிய இந்திய அணி, 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் சேர்த்தது.

துவக்க வீரராக களமிறங்கிய இஷான் கிஷன் 3 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 37 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ஷூப்மான் கில்(7), சூர்யகுமார் யாதவ் (7), சஞ்சு சாம்சன் (5) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 29 ரன்களில் விக்கெட்டை இழந்தார். கடைசி நேரத்தில் அதிரடி காட்டிய தீபக் ஹூடா ஆட்டமிழக்காமல் 41 ரன்களும், அக்சர் பட்டேல் ஆட்டமிழக்காமல் 31 ரன்களும் சேர்த்ததால் இந்தியா கவுரவமான ஸ்கோரை எட்டியது.

இதையடுத்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணிக்கு இந்திய பந்துவீச்சாளர்கள் கடும் நெருக்கடி அளித்தனர். துவக்க வீரர் பதும் நிசங்கா(1), தனஞ்செய டி சில்வா (8) ஆகியோரை விரைவில் அவுட் ஆக்கினார் ஷிவம் மவி. அதன்பின்னரும் சீரான இடைவெளியில் இலங்கை விக்கெட்டுகள் சரிந்தன. அசலங்கா 12 ரன்னிலும், குஷால் மென்டிஸ் 28 ரன்னிலும், பனுகா ராஜபக்சே 10 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கேப்டன் தசுன் சனகா, ஹசரங்கா டி சில்வா ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. ஹசரங்கா 21 ரன்களும், தசுன் சனகா 45 ரன்களும் சேர்த்து நம்பிக்கை அளித்தனர். இதனால் ஆட்டம் கடைசி வரை விறுவிறுப்பாக சென்றது.

கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவை என்ற நிலையில், அக்சர் பட்டேல் வீசிய அந்த ஓவரை எதிர்கொண்ட கருணாரத்னே, 3வது பந்தில் சிக்சர் அடித்து நம்பிக்கை அளித்தார். ஆனால் 5வது பந்தில் கசுன் ரஜிதா ரன் அவுட் ஆனதால் நம்பிக்கை தகர்ந்தது.

கடைசி பந்தில் 4 ரன் தேவைப்பட்ட நிலையில், அந்த பந்தில் கருணாரத்னே ஒரு ரன் எடுத்து, இரண்டாவது ரன்னுக்கு ஓடியபோது மறுமுனையில் தில்சன் ரன் அவுட் ஆனார். இதனால், இலங்கை அணி 160 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

கருணாரத்னே 23 ரன்களுடன் களத்தில் இருந்தார். இதனால் இந்தியா 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இந்தியா தரப்பில் ஷிவம் மவி 4 விக்கெட்டுகளை கைப்பற்றி வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். உம்ரான் மாலிக், ஹர்சல் பட்டேல் தலா 2 விக்கெட் எடுத்தனர்.