இறுதி செமஸ்டர் தேர்வு மதிப்பெண்கள் குறித்து அண்ணா பல்கலைக்கழகம் விளக்கம்
ஆன்லைனில் இறுதி செமஸ்டர் தேர்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தவுள்ள நிலையில், தேர்வின்போது பின்பற்ற வேண்டிய அறிவுரைகளை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகம் வெளியிட்டு இருக்கிறது. அதில் சில முக்கிய அறிவுரைகள் வருமாறு:-
* லேப்டாப், செல்போன், டேப் போன்ற மின்சாதனங்களை குறைந்தது 2 மணி நேரம் தொடர்ந்து உபயோகப்படுத்தும் அளவுக்கு தயார்படுத்தி வைத்துக்கொள்ள வேண்டும். அதேபோல் இணையதள வசதியும் சரியாக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.
* கேமரா மூலம் மாணவர்கள் தெரியும் வகையில் போதிய வெளிச்சத்துடன் கூடிய மூடிய அறையில் உட்கார்ந்து கொள்ள வேண்டும். ஜன்னலுக்கு எதிரே அல்லது அருகில் அமர வேண்டாம். நீங்கள் வைத்திருக்கும் முன்பக்க கேமரா ஒரு மணி நேரத்துக்கு நகர்த்தாமல் இருப்பதற்கு ஏற்ற வகையில் தயார்படுத்தி கொள்ள வேண்டும்.
* தேர்வு தொடங்குவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பு மாணவர்கள் ஆன்லைனில் ‘லாக்’கின் செய்து கொள்ள வேண்டும். தேர்வு எழுதும் அறையில் வேறு யாரும் இருக்க அனுமதி இல்லை. தேர்வின்போது ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு நகருவது கூடாது. அதேபோல் பாடப்புத்தகங்களை எடுத்து குறிப்பு எடுக்கவும் அனுமதி கிடையாது.
* தேர்வில் 40 வினாக்கள் கேட்கப்படும், மாணவர்கள் 30 வினாக்களுக்கு (50 மதிப்பெண்கள்) சரியாக பதில் அளிக்க வேண்டும். அதன்படி, இந்த மதிப்பெண்கள் 30 சதவீதம் மதிப்பெண்களாக மாற்றி கணக்கில் கொள்ளப்படும். 20 சதவீதம் மதிப்பெண்கள் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளின் அகமதிப்பீட்டில் பெற்ற மதிப்பெண்களும், மீதமுள்ள 50 சதவீத மதிப்பெண்கள் முந்தைய செமஸ்டர் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் கணக்கிடப்படும்.
* தேர்வு தொடங்குவதற்கு முன்பு மாணவர்கள் தங்களுடைய முகத்தை கேமரா முன்பு காட்ட வேண்டும். அந்தசமயம் கல்லூரி அடையாள அட்டை அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அட்டையையும் காண்பிக்க வேண்டும். முககவசம் தேர்வின்போது அணிய வேண்டியது இல்லை.
* தேர்வு நடைபெறும்போது வட்டமான ‘பாக்சில்’ உங்கள் முகம் தெரியும். அதில் இருந்து நகராமல் பார்த்து கொள்ள வேண்டும். உங்கள் நடவடிக்கைகள் தொழில்நுட்ப உதவியுடன் (ரிமோட் பிரோக்டர்கள்) உன்னிப்பாக கவனிக்கப்படும்.
* தேர்வின்போது ‘நெட்வொர்க்’ மற்றும் மின்பாதிப்பு ஏற்பட்டால் 3 நிமிடங்களுக்குள் சரிசெய்து மீண்டும் தேர்வை தொடங்கலாம். மின்சாதன பொருட்கள், மென்பொருள், மின்பாதிப்பு போன்றவற்றால் ஏற்படும் நேர இழப்புக்கு பல்கலைக்கழகம் பொறுப்பு ஏற்காது. இருப்பினும் இதுபோன்ற சந்தர்ப்பங்களில் தேர்வின் இறுதி நேரத்தில் இருந்து 15 நிமிடங்கள் பதிலளிக்க அனுமதி அளிக்கப்படும்.
* தேர்வின்போது குறிப்பு எடுப்பதற்காக இணையதளத்தையோ, புத்தகங்களையோ, மற்றவர்களையோ அணுக அனுமதி இல்லை. மாணவர்களின் முக உணர்ச்சிகள், கண் அசைவுகள் மற்றும் அனைத்து செயல்பாடுகளும் தொழில்நுட்பம் மூலம் பதிவு செய்யப்படும்.
* ஆன்லைன் தேர்வின்போது புகைப்படம், வீடியோ எடுத்து பகிர்வது, சந்தேகத்துக்கிடமான செயல்களில் ஈடுபடுவது, ‘ஹெட்போன்’, சத்தத்தை ரத்து செய்யும் கருவி, ‘புளூடூத்’ சாதனங்களை பயன்படுத்துவது முறைகேடாக தேர்வு எழுதுவதாக கருதப்படும்.
*தேர்வின்போது ‘கீ-போர்டை’ பயன்படுத்த வேண்டாம். ‘மவுஸ்’ மட்டும் பயன்படுத்தி கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.