இறுதிக்கட்ட பிரசாரத்தில் அரசியல் தலைவர்கள் – நாளையுடன் பிரச்சாரம் முடிகிறது

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளுக்கு வருகிற 18-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. அத்துடன், தமிழகத்தில் காலியாக உள்ள 22 தொகுதிகளில் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் காலியாக உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

இதையொட்டி கடந்த சில வாரங்களாக அனல் பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சி தலைவர்கள் மாநிலம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து உச்சக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர். கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வேட்பாளர்கள் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்து வருகிறார்கள்.

கட்சிகளுக்கு ஆதரவாக நடிகர்-நடிகைகளும் மும்முரமாக தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். கடந்த மார்ச் மாதம் 20-ந் தேதி முதல் தொடர்ச்சியாக பிரசாரம் மேற்கொண்டு வரும் மு.க.ஸ்டாலின் இன்று (திங்கட்கிழமை) மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் தயாநிதி மாறனை ஆதரித்து வாக்கு சேகரிக்க உள்ளார்.

இதேபோல், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சென்னையில் இன்று மாலை 4 மணிக்கு பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார். சமீப காலமாக உடல் நலக்குறைவு காரணமாக அரசியல் நிகழ்ச்சிகள் எதிலும் விஜயகாந்த் பங்கேற்கவில்லை. அ.தி.மு.க.-தே.மு.தி.க. கூட்டணி உடன்பாடு ஏற்பட்ட நேரத்தில் அவர் கலந்து கொண்டார்.

அதன்பிறகு கடந்த சில நாட்களுக்கு முன்பு, டாக்டர்களின் ஆலோசனைக்கு ஏற்ப பிரசாரம் செய்வேன் என்று தெரிவித்து இருந்தார். அதன்படி, விஜயகாந்த் வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை தொகுதிகளில் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார். தே.மு.தி.க. வேட்பாளர் அழகாபுரம் ஆர்.மோகன்ராஜ், அ.தி.மு.க. வேட்பாளர் ஜெயவர்தன், பா.ம.க. வேட்பாளர் சாம்பால் ஆகியோரை ஆதரித்து வாக்கு சேகரிக்கிறார்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலம் தொகுதியிலும், துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தன் மகன் ரவீந்திரநாத்குமார் போட்டியிடும் தேனி தொகுதியிலும், மு.க.ஸ்டாலின் மத்திய சென்னையிலும், டிடிவி தினகரன் காஞ்சிபுரம், தென்சென்னை மற்றும் ஸ்ரீபெரும்புதூரிலும், வைகோ சங்கரன்கோவில், புளியங்குடி மற்றும் தென்காசியிலும் பிரசாரம் மேற்கொள்கின்றனர்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது மகன் டாக்டர் அன்புமணி ராமதாஸ் போட்டியிடும் தர்மபுரி பாராளுமன்ற தொகுதியிலும், கமல் திருச்சி, கரூர் மற்றும் நாமக்கல் பகுதியிலும், சீமான் சென்னையிலும் இன்று தீவிர பிரசாரம் மேற்கொள்கின்றனர்.

மாநிலம் முழுவதும் நடைபெற்று வரும் தீவிர பிரசாரம் நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணியுடன் ஒய்கிறது. வியாழக்கிழமை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது.

தேர்தல் பாதுகாப்பு பணிக்காக ஏற்கனவே 10 கம்பெனி (சுமார் 100 வீரர்கள்) துணை ராணுவப்படை வீரர்கள் தமிழகம் வந்து உள்ளனர். இந்தநிலையில் நேற்று மேலும் 150 கம்பெனி துணை ராணுவ வீரர்கள் தமிழகம் வந்தனர். வாக்குப்பதிவு நாள் நெருங்கி வருவதால், இறுதிக் கட்டத்தில் நடைபெறும் பண பட்டுவாடாவை தடுக்க தேர்தல் கமிஷன் தீவிரமாக கண்காணித்து வருகிறது. பறக்கும்படை அதிகாரிகள் மும்முரமாக சோதனை நடத்தி வருகிறார்கள்.

7 கட்டமாக நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலில் கடந்த 11-ம் தேதி முதல் கட்ட தேர்தல் நடைபெற்றது. இதில் 18 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 91 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. 18-ம் தேதி நடைபெற உள்ள 2ம் கட்டத் தேர்தலில் தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் (புதுவை) உள்ள 97 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: south news