X

இறந்துவிட்டதாக செய்தி! – ஆக்ரோஷமான நடிகை ரேகா

சந்திரமவுலி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், ஷாலினி பாண்டே, ஜெயசித்ரா, ரேகா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘100 சதவீதம் காதல்’. தெலுங்கில் வெளியான ‘100 சதவீதம் லவ்’ படத்தின் தமிழ் ரீமேக் இது.

இந்த படம் வரும் 4-ந்தேதி வெளியாகிறது. இதையொட்டி நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகை ரேகா பேசியதாவது: ’இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ், ஷாலினி ரொம்ப அழகாக நடித்திருக்கிறார்கள். நானும், ‘தலைவாசல்’ விஜய் சாரும் ஜி.வி.பிரகாசுக்கு அப்பா அம்மாவாக நடித்துள்ளோம். இங்கு ஒரு வி‌ஷயம் சொல்ல வேண்டும் என ஆசைப்படுகிறேன்.

ரஜினி சார், விஜய் சார், அஜித் சார் என பலரும் பன்ச் வசனங்கள் பேசுவார்கள். நான் பன்ச் வசனங்கள் பேசும் அளவுக்கு பெரிய சூப்பர் ஸ்டார் அல்ல. ‘உசுப்பேத்துறவன்கிட்ட உம்முன்னும், கடுப்பேத்துறவன்கிட்ட கம்முன்னும் போயிட்டா வாழ்க்கை ஜம்முன்னு இருக்கும்‘ என்று விஜய் சார் சொன்னது போல் இருக்கிறேன்.

ஆனால், என்னை புதைத்து அருகில் ரஜினி சார், விஜய் சார் எட்டி பார்ப்பது போல் டிசைன் செய்து நான் இறந்துவிட்டதாக ஆகஸ்டு 17-ந்தேதியில் இருந்து செய்திகள் பரவி வருகின்றன. எனக்கு ஒன்றும் இல்லை. நான் நன்றாக தான் இருக்கிறேன். இன்று பல்வேறு ஊர்களில் இருப்பவர்கள் எல்லாம் யூடியூப் சேனல் தொடங்கி, அதில் தேவையில்லாத வி‌ஷயங்களை போட்டு அதன் மூலம் வருமானம் பெறுகிறார்கள்.

இது எந்த நிலைக்கு போகும் என தெரியவில்லை. இதற்கு மத்திய அரசு கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக, பிரபலங்கள் இறந்துவிட்டார்கள் என்று செய்தி பரப்பப்படும் போது பிரபலங்களை விட அவர்களை சேர்ந்தவர்களை ரொம்பவே வருத்தப்பட வைக்கும்.

என்னிடமே சில நடிகர்கள் தொலைபேசியில் ‘நீ இறந்துவிட்டாயா’ எனக் கேட்டார்கள். ஆமாம். இப்போது பேய் தான் பேசுகிறேன் என சொன்னேன். இறந்து விட்டீர்களா என்பதை என் தொலைபேசியிலேயே அழைத்து கேட்கிறார்கள். எனக்கு ரொம்பவே வருத்தமாக இருக்கிறது. நான் கணவன், குழந்தைகளுடன் சந்தோ‌ஷமாக இருக்கிறேன். 100 படங்களைத் தாண்டி விட்டாலும் இன்னும் மாநில அரசு, மத்திய அரசு விருதுகள் வாங்க வேண்டும் என்ற ஆசையிருக்கிறது”

இவ்வாறு அவர் பேசினார்.