Tamilசெய்திகள்

இரவு நேர ஊரடங்கை அமல்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸ் தொற்று அதிகரித்த வண்ணம் உள்ளது. டெல்லி, மகாராஷ்டிரா, தமிழகம், குஜராத், ராஜஸ்தான் போன்ற தொழில் மாநிலங்கள் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஒமைக்ரான் கால் பதித்து விட்டது.

மேலும், இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு 220 ஆக உயர்ந்துள்ளது. டெல்டாவை விட தீவிரத்தன்மை கொண்டதால் 3-வது அலையை தடுக்க கட்டுப்பாடு அவசியமாகிறது. மேலும், பண்டிகை காலம் நெருங்குவதால் கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் இரவு ஊரடங்கு, எப்போதும் செயல்படும் உதவி மையம், கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என்றும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.

கடந்த ஒரு வாரத்தில் பாசிட்டிவ் சதவீதம் 10-க்கு மேல் அதிகரிப்பு அல்லது ஆக்சிஜன் உதவியுடன் கூடிய 40 சதவீத படுக்கைகள் நோயாளிகளால் நிரப்பப்பட்டுள்ள மாநிலங்கள் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். உச்சத்தை அடைவதற்கு முன்னதாக கட்டுப்படுத்த வேண்டும்.

பரிசோதனைகளை தீவிரப்படுத்த வேண்டும். மக்கள் கூடுவதை நெறிமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட நடவடிக்கைகளை  மாநில அரசுகள் எடுக்க வேண்டும் என கடிதம் மூலம் தெரிவித்துள்ளது.

மேலும், 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தும் பணியை முடுக்கிவிட்டு உறுதிப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுள்ளது. அதிக பாதிப்பு (Cluster) உள்ள இடங்களில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு உடனடியாக ஆய்வு மையத்திற்கு அனுப்ப வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது.