தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ‘அடல்ட் ஹாரர் காமெடி’ ஜானர் படங்களுக்கு ஒரு கலவையான வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில் யோகிபாபு, யாஷிகா ஆனந்த் மற்றும் நிக்கி தம்போலி ஆகியோர் நடிக்க, பெயரிடப்படாத படத்தை இயக்கும் அறிமுக இயக்குனர் விநாயக் சிவா தன் படத்தை பற்றி சில தகவல்களை பற்றி கூறியுள்ளார்.
“இந்த படத்தை நான் ‘அடல்ட் ஹாரர் காமெடி’ என்று குறிப்பிடுவதை விட ‘குறும்பு’ வகையாக படம் என சொல்வேன். அதை நியாயப்படுத்தும் வகையிலான ஒரு சரியான கதை இருக்கிறது. ஸ்கிரிப்ட் எழுதும்போது நான் கவனத்தில் வைத்திருந்த முக்கிய விஷயம், யாரையும் காயப்படுத்தவோ அல்லது இழிவுபடுத்தவோ கூடாது என்பது தான். வேடிக்கையான மற்றும் முழுமையான பொழுதுபோக்கு அம்சங்களுடன் அச்சமூட்டும் விஷயங்களும் படத்தில் இருக்கும். மேலும் விஷுவல் எபெக்ட்ஸ் மற்றும் 3D மூலம் திகிலான மற்றும் பயமுறுத்தும் புதிய அனுபவத்தை வழங்குவதற்கு நாங்கள் முயற்சிக்கின்றோம்” என்கிறார் விஷுவல் கம்யூனிகேஷன் பட்டதாரியான அறிமுக இயக்குனர் விநாயக் சிவா.
மேலும் கூறும்போது, “சில பிரபல நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. கூடிய விரைவில் அது சம்பந்தப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும். இப்போதைக்கு தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகரான யோகிபாபுவை ஒப்பந்தம் செய்திருக்கிறோம். யாஷிகா ஆனந்த் மற்றும் நிக்கி தம்போலி ஆகியோரும் அவருடன் இணைந்து நடிக்கிறார்கள்” என்றார்.
ரஜினிகாந்தின் 2.0 படத்தில் பணியாற்றிய பிரபலமான தொழில்நுட்ப வல்லுநர்கள் சிலர் இந்த படத்தில் பணியாற்ற உள்ளனர். இந்த படம் 3Dயில் படம்பிடிக்கப்படும் முதல் ‘அடல்ட் ஹாரர் காமெடி’ திரைப்படம் என்ற பெருமையை பெற்றிருக்கிறது. படத்தின் முன் தயாரிப்பு வேலைகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. ஜனவரி மாதத்தின் மத்தியில் படப்பிடிப்பு துவங்கப்பட இருக்கிறது.