Tamilவிளையாட்டு

இரண்டு முறை பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் நியூசிலாந்து கிரிக்கெட் அணி

நியூசிலாந்து கிரிக்கெட் அணி அடுத்த ஆண்டு இரண்டு முறை பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் நியூசிலாந்து அணி, பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் மோத இருந்தது. பிறகு பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடங்குவதற்கு முன்பே சுற்றுப்பயணத்தை ரத்து செய்துவிட்டு நாடு திரும்பியது. இந்நிலையில் நியூசிலாந்து அணி, ரத்து செய்த போட்டிகளையும் சேர்ந்து அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம், 2023-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் என இரண்டு முறை பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் ரமீஸ் ராஜா கூறியதாவது:-

நியூசிலாந்து கிரிக்கெட் போர்டுடன் ஆலோசித்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி சார்பாக 2 டெஸ்ட் போட்டிகளிலும், ஐசிசி ஆண்கள் உலகக்கோப்பை சூப்பர் லீக் தொடருக்காக 3 ஒருநாள் போட்டிகளிலும் நியூசிலாந்துக்கு எதிராக அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் பாகிஸ்தான் மோதவுள்ளது. அதே போல இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்ட போட்டிகளுக்கு பதில், 2023-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5 ஒருநாள் போட்டிகளிலும், 5 டி20 போட்டிகளிலும் பாகிஸ்தான் மோதவுள்ளது. இந்த இரு சுற்றுப்பயணங்களும் நியூசிலாந்து-பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான புரிதலையும், நட்பையும் அதிகரிக்கும்.

இவ்வாறு ரமீஸ் ராஜா கூறினார்.

இதன்மூலம் பாகிஸ்தான் அணி 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 2023-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய அணிகளுடன் மொத்தம் 8 டெஸ்ட் , 11 ஒருநாள் மற்றும் 13 டி20 போட்டிகளில் மோதவுள்ளது.