தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களும் முழு உடல் பரிசோதனை செய்து கொள்ளும் வகையில் சுகாதாரத்துறை சார்பில் வருமுன் காப்போம் திட்டம் நாளை (29-ந்தேதி) சேலம் மாவட்டம் வாழப்பாடியில் தொடங்கி வைக்கப்பட உள்ளது.
இதில் கலந்து கொள்ள தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை காலை 9 மணியளவில் தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து சேலம் காமலாபுரம் விமான நிலையம் வருகிறார். அங்கு மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., மேற்கு மாவட்ட பொறுப்பாளர் டி.எம்.செல்வகணபதி, கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி., தேர்தல் பணிக்குழு செயலாளர் வீரபாண்டி ஆ.ராஜா, கலெக்டர் கார்மேகம் மற்றும் தி.மு.க.வினர், அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளிக்கிறார்கள்.
தொடர்ந்து வாழப்பாடி செல்லும் மு.க.ஸ்டாலின் அங்குள்ள அரசு பள்ளியில் காலை 10 மணிக்கு நடக்கும் விழாவில் வருமுன் காப்போம் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் கார்மேகம் முன்னிலை வகிக்கிறார். பின்னர் ஆத்தூருக்கு செல்லும் மு.க.ஸ்டாலின் புதிதாக கட்டப்பட்டுள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தை திறந்து வைக்கிறார்.
தொடர்ந்து 12 மணி முதல் சேகோசர்வ் அதிகாரிகள், ஆலை உரிமையாளர்கள் மற்றும் மரவள்ளி கிழங்கு விவசாயிகளுடனான கலந்துரையாடல் கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார். இதில் தரமான சேகோசர்வ் உற்பத்தி மற்றும் அவர்களின் தேவை குறித்தும் கேட்டறிகிறார்.
பின்னர் மு.க.ஸ்டாலின் சேலத்தில் உள்ள ஓட்டலுக்கு வருகிறார். மாலை 4.30 மணிக்கு கருப்பூர் சிட்கோ தொழிற்பேட்டையை பார்வையிட்டு விசைத்தறி சங்கத்தினருடன் ஆலோசனை மேற்கொள்கிறார். இந்த நிகழ்சிகளில் அரசியல் கட்சியினர், அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலம் வருகையையொட்டி சேலம் சரக டி.ஐ.ஜி. மகேஷ்வரி, மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்மல்கோடா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபினவ் ஆகியோர் தலைமையில் 1000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.
சேலம் கருப்பூர் நிகழ்ச்சியை முடித்து விட்டு மாலை 6 மணியளவில் மு.க.ஸ்டாலின் தருமபுரிக்கு புறப்பட்டு செல்கிறார். 30-ந்தேதி காலை 9.30 மணியளவில் தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். பின்னர் ஒகேனக்கல் செல்லும் அவர் கூட்டு குடிநீர் திட்ட பம்பிங் ஸ்டேசனை பார்வையிடுகிறார். பிற்பகல் 3.45 மணியளவில் வத்தல் மலைக்கு சென்று மலை வாழ் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். தொடர்ந்து மாலை 6 மணியளவில் சேலம் காமலாபுரம் விமான நிலையம் வரும் அவர் அங்கிருந்து தனி விமானத்தில் சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார்.