தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை தனது வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் ஜனநாயகம் எப்படி இருக்க கூடாதோ அப்படியெல்லாம் தான் இருக்கிறது. ஊழல், குடும்ப ஆட்சியில் திளைத்து, ஒரு குடும்ப நலனுக்காக அரசியல் நடந்து கொண்டிருக்கிறது. தமிழக அரசாங்கம் கடந்த 33 மாதங்களாக கதை, திரைக்கதை, வசனமாக நடக்கிறதே தவிர மக்களுக்கான அரசியலாக இல்லை. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 3 முறை வெளிநாட்டு பயணம் சென்றும் ஒரு ரூபாய்கூட முதலீடு வரவில்லை.
உத்தரபிரதேசம் ரூ.33 லட்சம் கோடி முதலீட்டை ஈர்த்துள்ள நிலையில் தமிழகம் ரூ.6.60 லட்சம் கோடியை பெற்றுள்ளதாக கூறுகிறது. அதிலும் முதலீடு வந்து சேரவில்லை. நிதி நிலை அறிக்கையில் மத்திய அரசின் திட்டங்களை பெயர் மாற்றி வைத்துள்ளார்கள். தேர்தல் அறிக்கையில் 3.5 லட்சம் பேருக்கு அரசு வேலை என்று கூறிவிட்டு நிதி நிலை அறிக்கையில் 60 ஆயிரம் பேருக்கு அரசு வேலை கொடுத்துள்ளதாக கூறி உள்ளார்கள்.
இரண்டு திராவிட கட்சிகளும் ஊழலுக்கு இலக்கணமாக தங்கள் தனிப்பட்ட வளர்ச்சியை மட்டுமே நோக்கமாக கொண்டிருக்கின்றன. பா.ஜனதா கட்சியின் வளர்ச்சியை கண்டு பயந்து இரண்டு பங்காளி கட்சிகளும் (தி.மு.க.-அ.தி.மு.க.) ரகசிய கூட்டணி வைத்து உள்ளன.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.