இரண்டு ஆண்களை திருமணம் செய்ய சார் பதிவாளர் அலுவலகத்தி விண்ணப்பித்த பெண் – கேரளாவில் பரபரப்பு

கேரள மாநிலத்தில் சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் திருமணம் செய்ய வேண்டுமென்றால் சார் பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தவரின் திருமணத்திற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்காத பட்சத்தில், ஒரு மாதம் கழித்து திருமணம் செய்ய அனுமதி அளிக்கப்படும்.

இந்த நிலையில் கொல்லம் மாவட்டத்தில் இளம்பெண் ஒருவர், 2 சார் பதிவாளர் அலுவலகங்களில் திருமணத்திற்கு விண்ணப்பித்துள்ளார். அந்த பெண் கொல்லம் அருகே பத்மநாபபுரத்தில் லேப் டெக்னீசியனாக பணிபுரிந்து வருகிறார். அவர் தனது 2 விண்ணப்பங்களிலும் வெவ்வேறு ஆண்களின் பெயரை குறிப்பிட்டிருந்தார்.

அதாவது அந்த பெண் பத்மநாபபுரம் புன்னாலை சேர்ந்த வாலிபர் ஒருவரை திருமணம் செய்ய விரும்புவதாக பத்மநாபபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் கடந்த மாதம் 30-ந்தேதி விண்ணப்பம் செய்திருக்கிறார். அதே பெண் புனலூரில் உள்ள சப்-ரிஜிஸ்டர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் (13-ந்தேதி) புனலூரை சேர்ந்த வாலிபரை திருமணம் செய்ய விரும்புவதாக விண்ணப்பித்திருந்தார்.

திருமண விண்ணப்பங்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படுவதால், ஒரு பெண் 2 சார்பதிவாளர் அலுவலகத்தில் வெவ்வேறு ஆண்களின் பெயரை குறிப்பிட்டு திருமணத்திற்கு விண்ணப்பித்திருந்த விவரம் தெரியவந்தது. இதனை கண்டறிந்த புனலூர் சார் பதிவாளர், அந்த பெண்ணின் விண்ணப்பத்தை பத்மநாபபுரம் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தார்.

2 சார் பதிவாளர் அலுவலகங்களில், வெவ்வேறு ஆண்களின் பெயரை குறிப்பிட்டு திருமணத்திற்கு விண்ணப்பித்தது குறித்து விவரம் கேட்பதற்காக அந்த பெண் பத்மநாபபுரம் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வருமாறு அழைக்கப்பட்டிருந்தார். அதன்படி அந்த பெண் புனலூரை சேர்ந்த வாலிபருடன் பத்மநாபபுரம் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வந்து விளக்கம் அளித்தார்.

அந்த பெண், புனலூரை சேர்ந்த வாலிபருடன் நீண்ட நாட்களாக ‘லிவிங் டுகெதர்’ உறவில் இருந்துள்ளார். அப்போது அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக, அந்த வாலிபரிடம் இருந்து பிரிந்து தாயுடன் சென்று தங்கிவிட்டார். அப்போது அந்த பெண்ணுக்கு பத்மநாபபுரத்தை சேர்ந்த வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது.

அந்த வாலிபர் ஒரு காகிதத்தில் தன்னை கையெழுத்து போட வைத்ததாகவும், அது தான் பத்மநாபபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் தனது பெயரில் கொடுக்கப்பட்ட திருமண விண்ணப்பம் என்றும் அந்த பெண் தெரிவித்துள்ளார்.

ஆனால் அந்த பெண் கூறுவது நம்பத்தகுந்ததாக இல்லை என்று பத்மநாபபுரம் சார்பதிவாளர் அலுவலக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே அந்த பெண் மற்றும் அவர் குறிப்பிட்டுள்ள வாலிபர்களின் குடும்பத்தினரை சந்திக்கும் வகையில் பத்மநாபபுரம் மற்றும் புனலூர் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வெவ்வேறு நாட்களில் வருமாறு தெரிவித்துள்ளனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news