இரண்டாவது முறையாக விஜயுடன் மோதும் கார்த்தி
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி உள்ளிட்டோர் நடித்திருக்கும் ‘மாஸ்டர்’ படத்தை ஏப்ரல் மாதம் திரைக்கு கொண்டு வர படக்குழு முயற்சித்தது. ஆனால் கொரோனா ஊரடங்கால் முடியாமல் போனது. அக்டோபர் 15-ம் தேதி முதல் திரையரங்குகளை திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கியிருக்கும் நிலையில் மாநில அரசு இன்னும் அனுமதி வழங்கவில்லை.
இதனிடையே ‘சூரரைப்போற்று’ உள்ளிட்ட ஒரு சில படங்கள் ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டன. ஆனாலும் மாஸ்டர் திரைப்படத்தை திரையரங்கில் தான் திரையிடுவோம் என்பதில் உறுதியாக இருக்கிறது படக்குழு. இந்நிலையில் மாஸ்டர் படத்தை 2021-ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியிடும் திட்டத்தில் படக்குழுவினர் இருப்பதாக கூறப்படுகிறது.
இதனிடையே பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடித்திருக்கும் ‘சுல்தான்’ திரைப்படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பு முடிவடைந்திருப்பதாகவும், நல்ல ஒரு பண்டிகை நாளில் படத்தை வெளியிட காத்திருப்பதாகவும் படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு கூறியுள்ளார்.
எனவே ‘சுல்தான்’ திரைப்படம் பொங்கலுக்கு திரைக்கு வரும் என தெரிகிறது. அப்படி வெளியானால் மாஸ்டர் திரைப்படமும் சுல்தானும் ஒரே நாளில் திரைக்கு வரும். கடந்த 2019-ம் ஆண்டு பிகில், கைதி ஆகிய படங்கள் ஒரே நாளில் திரைக்கு வந்து வசூலை வாரிக்குவித்ததும் குறிப்பிட்டத்தக்கது.