Tamilசெய்திகள்

இரண்டரை மாதங்களுக்குப் பிறகு வழிபாட்டு தளங்கள் இன்று திறக்கப்பட்டது

கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில் கடந்த மார்ச் 25-ந்தேதியில் இருந்து அனைத்து வழிபாட்டுத் தலங்களும் மூடப்பட்டன. பூஜை மட்டும் நடத்த அனுமதிக்கப்பட்டது. பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.

இந்நிலையில், 5ம் கட்ட ஊரடங்கில் பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. இன்று (திங்கட்கிழமை) முதல், வழிபாட்டு தலங்களை திறக்க, மத்திய அரசு அனுமதி அளித்தது. ஆனால் முடிவெடுக்கும் அதிகாரம் மாநில அரசுகளுக்கே வழங்கப்பட்டது. வழிபாட்டு தலங்களில் மேற்கொள்ள வேண்டிய பல்வேறு கட்டுப்பாடுகளையும் மத்திய அரசு வெளியிட்டது.

அதன்படி, 75 நாட்களுக்குப் பிறகு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டன. பக்தர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து வழிபாடு செய்கின்றனர். வழிபாட்டுத் தலங்களில் வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

ஆந்திர மாநிலத்தில் உள்ள திருமலை-திருப்பதி வெங்கடேசபெருமாள் கோவில் இன்று வழிபாட்டுக்கு திறக்கப்பட்டது. இன்றும், நாளையும் திருமலை-திருப்பதி தேவஸ்தான நிரந்தர ஊழியர்கள், ஓய்வுபெற்ற ஊழியர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 10-ந்தேதி திருமலை பாலாஜி நகரில் வசிக்கும் உள்ளூர் மக்கள், திருப்பதியில் வசிக்கும் உள்ளூர் மக்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.

11-ந்தேதி முதல் ஆந்திரா உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் பொது தரிசனத்தில் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். அவர்கள் இ-பாஸ் பெற்று வர வேண்டும். அந்தவகையில் தினசரி 5 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். ஒரு மணி நேரத்துக்கு 500 பக்தர்கள் வீதம் கோவிலுக்குள் அனுப்பப்பட உள்ளனர்.

திருமலையில் உள்ள கல்யாண கட்டாக்களில் பக்தர்கள் தங்களின் தலைமுடியை காணிக்கையாகச் செலுத்தலாம். மேலும் திருமலையில் பொதுமக்கள் திருமணங்களை நடத்த அனுமதிக்கப்படுகின்றனர். அதில் 50 பேர் மட்டுமே பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் புதுச்சேரியிலும் வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டன. புதுவை மணக்குள விநாயகர் கோவில், உலகப் புகழ்பெற்ற திருநள்ளாறு சனீஸ்வரன் கோவில், காரைக்கால் பள்ளிவாசல் என முக்கிய வழிபாட்டுத் தலங்களில் இன்று பக்தர்கள் தனி மனித இடைவெளியுடன் வழிபாடு நடத்திவருகின்றனர். சானிடைசர் மூலம் பக்தர்களின் கைகள் சுத்தம் செய்யப்படுகிறது. உடல் வெப்ப பரிசோதனை செய்யப்படுகிறது.

இதேபோல் கேரள மாநிலத்தில் உள்ள கோவில்கள் அனைத்தும் நாளை (செவ்வாய்க்கிழமை) திறக்கப்படுகின்றன. மாதம் 5 நாட்கள் திறக்கப்படும் சபரிமலை அய்யப்பன் கோவில் வருகிற 14-ந்தேதி பல்வேறு கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டு குறைந்த எண்ணிக்கையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். தமிழகத்தில் வழிபாட்டுத் தலங்களை திறப்பதற்கான தடை நீடிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *