அ.தி.மு.க.வில் இரட்டை தலைமை இருக்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்துள்ள ராஜன் செல்லப்பாவுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி வருமாறு:-
ராஜன்செல்லப்பாவின் பேச்சு முறையற்ற குற்றச்சாட்டு. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என இரட்டை அதிகாரம் இருப்பதாக இப்போது சொல்லும் இவர், அந்த பதவிகளுக்கு இருவரையும் நியமித்தபோது ஏன் எதிர்க்கவில்லை. அப்போதே எதிர்த்திருக்கலாமே.
இத்தனை நாட்களாக அமைதியாக இருந்து விட்டு இப்போது இப்படிச் சொல்ல என்ன காரணம். அம்மா இல்லாததால் இப்படி பேசியுள்ளார். அம்மா இருந்திருந்தால் இவரால் வாயைத் திறந்திருக்க முடியுமா?
ராஜன் செல்லப்பா ஊடகங்களில் பேசி கட்சியை பலவீனப்படுத்துவதை விட்டு விட்டு கட்சிக்கு பலம் சேர்க்கும் வகையில் செயல்பட வேண்டும். உட்கட்சி விவகாரங்களை ஊடகங்கள் மூலம் பேசியது தவறு. அவர் கட்சி தலைமையிடம்தான் பேசியிருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.