X

இரட்டை குவளை முறை நடைமுறையில் இருப்பதை நிரூபித்து விட்டால் அரசு அலுவலர்கள் பதவி விலக தயாரா? – உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே சங்கம் விடுதியில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது. மக்கள் அளித்த புகார் தொடர்பாக கந்தர்வகோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் நேரில் விசாரணை நடத்தினார். குடிநீர் மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் தற்போது தொட்டி சுத்தம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சண்முகம் என்பவர் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், சங்கம் விடுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்ட வழக்கை காவல்துறை சரியாக விசாரிக்கவில்லை என்றும் இந்த வழக்கை வேறு விசாரணை அமைப்பு மாற்றவேண்டும் என்றும் குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்ட கிராம மக்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், புதுக்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரட்டை குவளை முறை இன்றும் நடைமுறையில் உள்ளது என்றும் சில தனியார் திருமண மண்டபங்கள் பட்டியலின மக்களுக்கு வழங்கப்படுவதில்லை என்றும் இது தொடர்பாக அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகவே இதில் நீதிமன்றம் தலையிட்டு உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

அந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, குடிநீர் தொட்டியில் மாட்டுசாணம கலக்கப்படவில்லை எனவும் அதில் பாசி தான் கலந்துள்ளது எனவும் மனுதாரர் குறிப்பிட்டுள்ளது போல இரட்டை குவளை முறை போன்ற பாகுபாடுகள் அங்கு இல்லை என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு குறுக்கிட்ட நீதிபதிகள், “இரட்டை குவளை முறை நடைமுறையில் இல்லை என எப்படி உறுதியாக சொல்ல முடியும்? இரட்டை குவளை முறை நடைமுறையில் இருப்பதை நிரூபித்து விட்டால் சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்கள் பதவி விலக தயாரா? என நீதிபதிகள் கடுமையாக கேள்வி எழுப்பினர்.

சமூகத்தில் நிகழும் தவறுகளை தனிநபர் சுட்டிக் காட்டினால் அதனை களைந்து சரிசெய்வதை விடுத்து சுட்டிக்காட்டிய நபர் மீது நடவடிக்கை எடுப்பது ஏற்கத்தக்கது அல்ல என்றும் தவறுகளை சுட்டிக்காட்டுபவர்கள் மீது குண்டாஸ் போன்ற நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது என நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.

பின்பு இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்தும், மாட்டுச்சாணம் கலப்பு வழக்கின் ஆவணங்களை ஒருவாரத்திற்குள் சிபிசிஐடி வசம் ஒப்படைக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்தது.