பிரதமர் மோடி நேற்று தமது கேரள பயணத்தை முடித்துக் கொண்டு கர்நாடகா மாநிலம் மங்களூரு சென்றார். அங்குள்ள கோல்ட் பின்ச் மைதானத்தில் நடந்த விழாவில் ரூ.3,800 கோடி மதிப்பீட்டிலான 8 திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார். விழாவில் பிரதமர் பேசியதாவது:-
வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்கும் திட்டத்தின் கீழ் கர்நாடகத்தில் இதுவரை 30 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. அதே போல் பிரதமரின் மருத்துவ உதவி திட்டத்தின் கீழ் மாநிலத்தில் 30 லட்சம் பேருக்கு 4 ஆயிரம் கோடி அளவுக்கு மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. மத்தியிலும், மாநிலத்திலும் (கர்நாடகா) இரட்டை என்ஜின் அரசு (பாஜக) இருப்பதால் மாநில மக்களின் விருப்பங்களை நிறைவேற்ற முடிகிறது.
உலக தரத்தில் உள்கட்டமைப்பு வசதிகள் வேண்டும் என்பது மக்களின் விருப்பம். அந்த விருப்பத்தை நாங்கள் நிறைவேற்றுகிறோம். இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற உற்பத்தி துறையை ஊக்குவிக்க வேண்டும். மேலும் இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும்.
ஏற்றுமதி அதிகரிக்கப்பட வேண்டும். நமது உற்பத்தி பொருட்கள் உலக அளவில் போட்டி போடும் வகையில் இருக்க வேண்டும். அரசின் திட்டங்களால் அதிக எண்ணிக்கையிலான ஏழை மக்கள் வளர்ச்சி பாதையில் முன்னிலைக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். மீனவர்கள், சிறு தொழில் செய்வோர் பயன் அடைய ஏராளமான திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் விரைவான இணைய சேவை கிடைக்க வேண்டியது அவசியம்.
இவ்வாறு பிரதமர் குறிப்பிட்டார்.