Tamilசெய்திகள்

இரட்டை என்ஜின் எங்கே? – உத்தவ் தாக்கரே தாக்கு

மணிப்பூரில் கடந்த மே மாதம் 3-ந்தேதி தொடங்கிய வன்முறை இன்னும் கட்டுக்குள் வரவில்லை. மணிப்பூர் கலவரத்திற்கு நாடு தழுவிய எதிர்ப்பு கிளம்பிய போதிலும், மத்திய அரசும் மாநில அரசும் இதுகுறித்து வெளிப்படையாக ஏதும் பேசாமல் இருந்து வருகிறது.

தற்போது அரியானா மாநிலத்தில் வன்முறை வெடித்துள்ளது. கடந்த மாதம் 31-ந்தேதி விஸ்வ இந்து பரிஷத் ஊர்வலம் நடந்தது. இதற்கு ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஊர்வலம் மீது சில மர்ம மனிதர்கள் கல் வீசியதால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் ஆறு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த வன்முறை பக்கத்து மாநிலங்களுக்கும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அருகில் உள்ள டெல்லி மாநிலத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இரண்டு மாநிலங்களிலும் பாரதிய ஜனதா ஆட்சிதான் நடந்து வருகிறது. மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே ஆட்சி இருந்தால் தான் மக்களுக்கு சேவை செய்ய முடியும். நலத்திட்டங்கள் சரியான முறையில் மக்களை சென்றடையும். அதனால் இரட்டை என்ஜின் ஆட்சிதான் மக்களுக்கு தேவை என பாரதிய ஜனதா கூறி வரும் நிலையில், தற்போது அந்த இரட்டை என்ஜின் எங்கே? என உத்தவ் தாக்கரே பா.ஜனதா நோக்கி கேள்வி எழுப்பி கடும் விமர்சனம் செய்துள்ளார்.

இதுகுறித்து உத்தவ் தாக்கரே கூறியிருப்பதாவது:-

முதலில் மணிப்பூர் தற்போது அரியானா. இது ராம்ராஜ்ஜியமா? இல்லையா?. அங்கே அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது. மணிப்பூர் நிலை என்ன என்று நான் திரும்ப திரும்ப கேட்டுக் கொண்டிருக்கிறேன். மணிப்பூர் மாநில கவர்னர் ஒரு பெண். அங்கு பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நடந்து கொண்டிருக்கும்போது ஏதும் நடக்கவில்லை என அரசு தெரிவித்து வருகிறது.

இரட்டை என்ஜின் எங்கே? பாரதிய ஜனதா எம்.எல்.ஏ. நித்திஷ் ராணா சட்டசபையில் பாகிஸ்தானுக்கு போவது குறித்து பேசுகிறார். பெண்களை பாதுகாக்க முடியாத அவர்களிடம் இதைவிட வேறு எதை எதிர்பார்க்க முடியும். தாங்கள் மணிப்பூரில் பெண்களின் நிலைகளை பற்றி கவலைப்படுகிறோம். அவர்கள் பெண்களை பாதுகாப்பதை விட இந்துத்வாவை பற்றி பேசுகிறார்கள், சீதைக்காக ராமாயணம் தொடங்கியது. திரவுபதிக்காக மகாபாரதம் தொடங்கியது. ஆனால் இந்த அரசு இதை மிகவும் கவனமாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆகவே இது இந்து தேசம் அல்ல. எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டம் மும்பையில் ஆகஸ்ட் மாதம் இறுதியில் அல்லது செப்டம்பர் மாதம் முதலில் நடக்கலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.