இரட்டை ஆதாயம் பெறும் விதிமுறை! – கங்குலி கருத்து
பிசிசிஐ-யின் தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக சமீபத்தில் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டார். அவர் இந்தியா சிமெண்ட் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்திய சிமெண்ட் நிறுவனத்தின் உரிமையாளருக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பங்கு இருப்பதால், ராகுல் டிராவிட் இரட்டை ஆதாயம் பெறும் சர்ச்சையில் சிக்கினார். பின்னர் அதில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில், இரட்டை ஆதாயம் பெறும் விதிமுறையை நடைமுறைக்கு ஏற்ப எளிதாக்க வேண்டும் என்று கங்குலி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து கங்குலி கூறுகையில் ‘‘நான் விதிமுறையில் விலக்கு வேண்டும் என்று கூறமாட்டேன். ஆனால் விதிமுறை நடைமுறைக்கு சாத்தியமானதாக இருக்க வேண்டும்.
தற்போது தேசிய அகாடமியின் தலைவராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் ஏற்கனவே இந்தியா சிமெண்ட் நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதால் பிரச்சனை எழுப்பப்படுகிறது. ஆனால், நடைமுறையில், ராகுல் டிராவிட்டுக்கு அகாடமியின் தலைவராகுவோம் என்பது தெரிந்திருக்காது. மூன்று வருடத்திற்குப் பிறகு மீண்டும் தலைவராக இருப்போமா? என்பதும் அவருக்குத் தெரியாது. ஆனால், இந்தியா சிமெண்ட் நிறுவனத்தில் பணிபுரிவது நிரந்தரமானது. தொடர்ந்து வேலையில் நீடிக்கலாம்.
நீங்கள் வர்ணனையாளராகவோ, பயிற்சியாளராகவோ இருந்தால், அதை நான் இரட்டை ஆதாயம் தரும் பதவியாக பார்க்கவில்லை. உலகளவில் ரிக்கி பாண்டிங்கை எடுத்துக்கொண்டால், அவர் ஆஸ்திரேலியாவின் பயிற்சியாளர், வர்ணனையாளர், ஆஷஸ் தொடரில் வர்ணனை செய்கிறார். அடுத்த வருடம் பார்த்தால் ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் பயிற்சியாளராக செயல்பட இருக்கிறார். இதை நாம் இரட்டை ஆதாயம் தரும் பிரச்சனையாக எடுத்துக் கொள்ளக்கூடாது.
ஏனென்றால், அது அவர்களின் திறமையைச் சார்ந்தது. அவர்கள் வர்ணனையாளர், பயிற்சியாளர் அல்லது ஐபிஎல் அணியின் உரிமையாளர்களில் ஒருவர் என்பதை நீங்கள் முடிவு செய்ய முடியாது. ஏனென்றால் அவர்கள் திறமையாளல் மக்களவை சென்றடைகிறார்கள். இது மிகத் தெளிவாக இருக்க வேண்டும். இல்லையென்றால் மோதல்தான் ஏற்படும்’’ என்றார்.