X

இயக்குநர் ஷங்கருக்கு நடிகர் ராம்சரண் புதிய நிபந்தனை

கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் 2’ படம் முடங்கியதால், இயக்குனர் ஷங்கர் தெலுங்கில் ராம்சரணை வைத்து புதிய படம் இயக்க தயாரானார். இதுபோல் ரன்வீர் சிங் கதாநாயகனாக நடிக்க அந்நியன் படத்தின் இந்தி ரீமேக்கை இயக்க உள்ளதாகவும் அறிவித்தார். இது சர்ச்சையானது.

‘இந்தியன் 2’ படத்தை முடித்துக் கொடுக்காமல் வேறு படங்களை இயக்க ஷங்கருக்கு தடை விதிக்கும்படி கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்தப் பிரச்சினையில் இருதரப்புக்கும் நடந்த சமரச பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்துள்ளது.

ஷங்கர் ‘இந்தியன் 2’ படத்தை முடிக்காமல் தெலுங்கு, இந்திப் படங்களை இயக்க அனுமதிக்க வேண்டாம் என்று அங்குள்ள திரைப்பட வர்த்தக சபைகளுக்கும் ‘இந்தியன் 2’ பட நிறுவனம் கடிதம் அனுப்பி உள்ளது.

இந்த சர்ச்சைகளை தொடர்ந்து ஷங்கர் இயக்கும் படத்தில் நடிக்க ராம்சரண் தயங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது. தனது படத்தை முடித்த பிறகே ஷங்கர் அடுத்த படத்தை இயக்குவதாக உறுதிமொழி அளித்தால்தான் படத்தில் நடிப்பேன் என்று ராம்சரண் நிபந்தனை விதித்து இருப்பதாக கூறப்படுகிறது.