Tamilசினிமா

இயக்குநர் வெற்றிமாறன் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த இயக்குநர் பேரரசு

சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் 60வது பிறந்த நாளையொட்டி குறும்பட, ஆவணப்பட கலைத்திருவிழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இயக்குனர் வெற்றிமாறன், “சினிமாவை திராவிட இயக்கம் கையில் எடுக்கும்போது, கலை கலைக்கானது தான் எனப் பேசினார்கள். மக்களை பிரதிபலிப்பது தான் கலை என உணர்த்தினார்கள்.

அந்த கலையை நாம் சரியாக கையாள வேண்டும். இல்லையென்றால், ஏற்கெனவே நம்மிடமிருந்து அடையாளங்களை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிப்பதாகட்டும், ராஜராஜ சோழனை இந்து அரசனாக்குவதாகட்டும் இப்படி தொடர்ந்து நடக்கிறது என்று விமர்சனம் செய்திருந்தார். அவரது கருத்துக்கு பலரும் எதிர்ப்பும் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.

இதையடுத்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் பேரரசு பத்திரிகையாளர்களை சந்தித்து பேசியதாவது, எந்த மேடையை எடுத்தாலும் இந்து மக்களை இழிவுப்படுத்துவது சிலர் ஒரு வேலையாக வைத்திருக்கிறார்கள். ஒருவர் இந்து மதத்தை இழிவுபடுத்தும் போது, அவருக்கு நாங்கள் பதில் சொன்னால், உடனே நாங்கள் மத வெறியர்கள் என்று சொல்கிறார்கள்.

ராஜராஜ சோழனை இந்து என்று அடையாளம் கொடுக்கிறாங்கன்னு இயக்குனர் வெற்றிமாறன் சொல்றாரு. சரி ராஜராஜ சோழன் இந்து இல்லை என்றால் வேறு என்ன கிறிஸ்துவரா? இல்ல இஸ்லாமியரா? ஆங்கிலேயர் நம் நாட்டை ஆட்சி செய்தபோது இந்தியா மாகாணம், மாகாணங்களாக பிரிந்து இருந்தது. அதில் மாற்றம் ஏற்பட்டு ஒன்றாக இணைத்து இன்று இந்தியா என்ற நாடாக்கியுள்ளனர்.

உலகத்திலேயே இந்தியா சிறந்த நாடாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. அதேபோல்தான் சைவம், வைணவம் ஆகிய அனைத்தும் இந்திய மதங்கள். அதை ஆங்கிலேயர்கள் ஒன்றிணைத்து இந்தியர் என்றார்கள். இங்கு சாமி கும்பிடுபவர்கள் அனைத்து தெய்வங்களையும் ஒன்றாக நினைத்து வழிபடுகிறார்கள். சாமி கும்பிடாதவர்களுக்கு இங்கு என்ன பிரச்சனை? உங்களுக்கு சாமி கும்பிட பிடிக்கவில்லை என்றால் இந்துக்கள் பற்றி ஏன் பேசுகிறீர்கள்,நாத்திகம் பேசுபவர் மனிதரே இல்லை, என்று தெரிவித்துள்ளார்.