அஜித் நடிப்பில் கடந்த 2007-ம் ஆண்டு வெளியான ‘கிரீடம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குனராக அறிமுகமாவனர் ஏ.எல்.விஜய். அதன்பின்னர் மதராசப்பட்டினம், தெய்வ திருமகள், தாண்டவம் உள்ளிட்ட பல படங்களை இயக்கி அனைவரையும் கவர்ந்தார். தொடர்ந்து அருண் விஜய் நடிப்பில் ‘அச்சம் என்பது இல்லையே- மிஷன் சாப்டர் 1’ என்ற படத்தை இயக்கினார். இப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.
இதைத்தொடர்ந்து ஏ.எல்.விஜய் புதிய படம் ஒன்றை இயக்குகிறார். மாதவன் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் கங்கனா ரனாவத் கதாநாயகியாக நடிக்கிறார். டிரைடெண்ட் ஆர்ட்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு நிரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது.
இயக்குனர் ஏ.எல்.விஜய் சென்னை தியாகராய நகர் ஹபிபுல்லா சாலையில் படப்பிடிப்பு தளம் பார்ப்பதற்காக தனது காரில் சென்றுள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர், இயக்குனர் விஜயின் காரை உரசி, மோதுவது போல் சென்றதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து அந்த இளைஞர், இயக்குனர் விஜய் மற்றும் உதவி இயக்குனர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து சென்னை, தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் இயக்குனர் விஜய்யின் மேலாளர் மணிவர்மா புகார் அளித்தார். தேனாம்பேட்டை போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.