Tamilசினிமா

இயக்குநர் மணிரத்னத்தை நாம் கொண்டாட வேண்டும் – நடிகர் ஜெயம் ரவி

மணிரத்னம் இயக்கத்தில் சில தினங்களுக்கு முன்பு வெளியான ‘பொன்னியின் செல்வன்-1’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான இப்படம் உலகம் முழுவதும் ரூ.450 கோடிக்கு மேல் வசூல் சாதனை நிகழ்த்தியது. இப்படத்தின் வெற்றி விழா சென்னையில் கொண்டாடப்பட்டது. இதில் இயக்குனர் மணிரத்னம், விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி உள்ளிட்ட பல திரைபிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இதில் நடிகர் ஜெயம் ரவி பேசியதாவது, ”நல்ல படைப்பை சர்வதேச அளவிற்கு கொண்டு சென்று பெரும் வெற்றியை பதிவு செய்த பத்திரிக்கையாளர்களுக்கும், ஊடகங்களுக்கும் நன்றி. தமிழ் ஊடகங்கள் மட்டுமில்லாமல், இந்திய ஊடகங்கள் மட்டுமல்லாமல் சர்வதேச ஊடகங்கள் அனைத்தும் பொன்னியின் செல்வன் படைப்பை கொண்டாடுகிறார்கள். இன்று உலகம் டிஜிட்டல் மயமான பிறகு அனைத்தும் எளிதாக இருக்கிறது. நட்சத்திரங்களைப் பற்றி ஊடகங்கள் சொல்லும் விசயங்கள் எங்களை விரைவாகவும், எளிதாகவும் வந்தடைகிறது.

உலகம் முழுவதும் அனைவரும் இந்த படைப்பை விமர்சனம் செய்திருக்கிறார்கள், வாழ்த்துக்கள். இவை அனைத்திற்கும் மூல காரணம் மணிசார் தான். அவர் நாற்பது வருடத்திற்கும் மேலாக தமிழ் சினிமாவில் ஒப்பற்ற படைப்பை வழங்கி கலை சேவை செய்து வருகிறார். பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றியை எப்படி கொண்டாடுவது என்று துல்லியமாக தெரியவில்லை. அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது. மணி சார் மற்றும் சுபாஸ்கரன் சார் ஆகிய இருவருக்கும் மகிழ்ச்சி கலந்த வெற்றியைக் கடந்த வாழ்த்துக்கள்.

இந்த தருணத்தில் நான் ஒரு விசயத்தை பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். இப்படி ஒரு பிரம்மாண்டமான வெற்றியை அளித்துவிட்டு, இயக்குனர் மணிரத்னம் அமைதியே உருவமாக அமர்ந்திருக்கிறார். இவரை நாம் கொண்டாட வேண்டும். அவரின் கண் முன்னால், அவரை வைத்துக் கொண்டு அனைவரும் பேச வேண்டும். அவர் தமிழ் சினிமாவில் பொக்கிஷம். அவரை பிரம்மாண்டமாக கொண்டாட வேண்டும்” என்றார்.