Tamilசினிமா

இயக்குநர் பா.இரஞ்சித் நடத்தும் ‘மார்கழியில் மக்களிசை 2021’

கலைகளை வளர்த்தலும், பண்பாட்டு வேர்களை மீட்டெடுத்தலும் ஏற்றத்தாழ்வுகளை நீக்கி மக்களை ஒன்று சேர்க்கும், என்ற சமத்துவ நோக்கத்திற்காக இயக்குநர் பா.இரஞ்சித், தனது நீலம் பண்பாட்டு மையம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ‘மார்கழியில் மக்களிசை’ என்ற தலைப்பில் பிரமாண்ட இசை நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.

அந்த வகையில், இந்த வருடத்திற்கான இசை நிகழ்ச்சி ‘மார்கழியில் மக்களிசை 2021’ என்ற தலைப்பில் மதுரை, கோவை மற்றும் சென்னை ஆகிய மூன்று இடங்களில் நடைபெறுகிறது. வரும் டிசம்பர் 18 ஆம் தேதி மதுரையிலும், டிசம்பர் 19 ஆம் தேதி கோவையிலும், டிசம்பர் 24 முதல் 31 ஆம் தேதி வரை சென்னையிலும் நடைபெறுகிறது.

மதுரையில் காந்தி அருங்காட்சியகம் அரங்கிலும், கோவையில் சிட்ரா ஆடிட்டோரியம் அரங்கிலும் நடைபெறும் இந்த இசை நிகழ்ச்சி, சென்னையில் வாணி மஹால், கிருஷ்ண கான சபா, மியூசிக் அகடாமி, ஐஐடி சென்னை மற்றும் தமிழ் இசை சங்கம் ஆகிய அரங்கங்களில் நடைபெறுகிறது.

இதுவரை கர்நாடக இசை ஆதிக்கம் செய்து வந்த தளங்களில், இயக்குநர் பா.இரஞ்சித்தின் முயற்சியால் மக்கள் இசையும் களம் இறங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு நிலத்தின் சிறப்பையும், வளங்களையும், குடிகளின் வாழ்வையும் அந்நிலத்தின் பாடல்களே நமக்கு விவரித்திருக்கின்றன.
இயற்கையை வணங்கி எல்லா உயிர்களும் சமம் என்ற மனம் கொண்டு, ஆட்டமும் பாட்டமுமாக கொண்டாடி வாழ்ந்த சமத்துவ சமூகம் நம் தமிழ்ச்சமூகமே, என்கிற வரலாற்று உண்மையை உரக்கச் சொல்லும் மக்கள் கலைகளின் பெருமைமிகு மாண்பை வெளிப்படுத்தும் விதமாக நடைபெறும், ‘மார்கழியில் மக்களிசை 2021’ தமிழ் நிலத்தின் வரலாற்றில், கலைகளும் பண்பாட்டு வடிவங்களும் ஆற்றிய பங்கினை எடுத்துரைக்கும் நிகழ்வாகவும் நடைபெற உள்ளது.