இயக்குநர் சீனு ராமசாமியை இளையராஜா நிராகரிக்க இது தான் காரணமா?

சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி, ஆர்.கே.சுரேஷ் ஆகியோர் நடிப்பில் தயாராகியிருக்கும் மாமனிதன் படத்திற்கு இளையராஜா-யுவன் சங்கர் ராஜா இருவரும் சேர்ந்து இசையமைத்திருந்தார்கள். இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் சீனு ராமசாமி பேசியதாவது,

இந்தப் படத்தை யுவன் தயாரிப்பதால் ஒரு சிறந்த படமாகவும், அவர்கள் நினைவு கூரத்தக்க படமாகவும் இதை எடுக்க வேண்டும் என்று நினைத்தேன். அதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்து, கதைக்களத்தை பண்ணைபுரத்திற்கு மாற்றினேன். இளையராஜா சார் வீடு இருக்கும் தெருவில்தான் கேமரா வைத்து முதல் ஷாட்டை எடுத்தேன். 37 நாட்களில் மொத்த படப்பிடிப்பையும் முடித்துக்கொடுத்தேன்.

இந்தப் படத்தின் பாடல் காட்சிகள் அனைத்தையும் நான் முன்னரே எடுத்துவிட்டேன். அதன் பிறகுதான் பாடல் உருவாக்கப்பட்டது. இந்தப் படத்தின் பாடல் உருவாக்கம், ரீரெக்கார்டிங் இரண்டிலுமே கலந்துகொள்ள நான் அழைக்கப்படவில்லை. அதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. நான் என்ன தப்பு செஞ்சேன்? இது என்ன நியாயம்? எனக்கு எவ்வளவு தவிப்பாக இருக்கும்.

கவிஞர் பா.விஜய்க்கு போன் செய்து பாடல் வரிகளை எனக்கு அனுப்புங்கள் என்றால் ஏதோ கள்ளக்காதலியிடம் பேசுவது போல தயங்கித்தயங்கி பேசுகிறார். ஒருநாள் யுவன் சங்கர் ராஜாவின் பிறந்த நாள் விழாவுக்கு சென்றிருந்தேன். அங்கு ஒருவர் வந்து சார் நான் உங்க படத்துல பாட்டு எழுதியிருக்கேன் என்றார்.

எந்தப் படம் என்று கேட்டால் மாமனிதன் என்றார். அவரிடம் பாட்டு வரி அனுப்புங்கள் என்று கேட்டேன். அவர்தான் பாடல் வரிகளை எனக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பி வைத்தார். இளையராஜா மீது எவ்வளவு அன்பு இருந்தால் பண்ணைபுரத்தில் சென்று நான் ஷூட்டிங் பண்ணியிருப்பேன். அப்படியிருக்கையில், என்னை ஏன் நீங்கள் நிராகரிக்கணும். அவருடைய இசையை நான் பாராட்டுகிறேன். இந்தப் படத்தின் முதல் மாமனிதனாக அவரை மதிக்கிறேன். காரணமில்லாமல் நிராகரித்தது மிகப்பெரிய வலியையும் தூங்க முடியாத நிலையையும் எனக்கு ஏற்படுத்தியது” என்று பேசினார்.

இளையராஜா-வைரமுத்து இருவருக்குள் எப்போதும் கருத்து வேறுபாடு இருப்பது எல்லோருக்கும் தெரிந்ததே. இந்த நிலையில் அவரோடு யுவன் சங்கர் ராஜாவை சேர வைத்து பாட்டு எழுத வைக்க முயற்சித்தார். இடம் பொருள் ஏவல் படத்தில் வைரமுத்து பாடல் எழுத யுவன் சங்கர் ராஜா இசையமைத்தார். அப்போதிருந்து சீனு ராமசாமி மீது இளையராஜா கடும் அதிருப்தியில் இருந்ததாகவும், சீனு ராமசாமியை சந்திக்க மறுத்ததற்கும் அதுதான் காரணம் என்றும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools