இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸுக்கு நீதிமன்றம் கண்டனம்!
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா உள்ளிட்டோர் நடித்த திரைப்படம் ‘தர்பார்’. இப்படம் கடந்த மாதம் வெளியானது. இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவு வருவாய் தரவில்லை என்றும் தங்களுக்கு நஷ்டத்தை கொடுத்துள்ளது என்று வினியோகஸ்தர்கள் போர் கொடி தூக்கினர். தர்பார் திரைப்படத்தின் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வீட்டையும், அலுவலகத்தையும் வினியோகஸ்தர்கள் சிலர் முற்றுகையிட்டனர்.
இதையடுத்து போலீஸ் பாதுகாப்பு கேட்டு ஏ.ஆர்.முருகதாஸ், சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.ராஜமாணிக்கம், பதில் அளிக்கும்படி போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிட்டார். இதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் வக்கீல், ‘போலீசார் பதிவு செய்த வழக்கை மேற்கொண்டு நடத்த முருகதாஸ் விரும்பவில்லை’ என்று கூறினார். இதையடுத்து நீதிபதி, ‘பாதுகாப்பு கேட்டு வழக்கு தொடர்வார்கள். பதில் அளிக்க போலீசுக்கு ஐகோர்ட்டும் உத்தரவிடும். போலீசாரும் வழக்குப்பதிவு செய்வார்கள். அதன்பின்னர் நடவடிக்கை வேண்டாம். பாதுகாப்பு கேட்ட மனுவை முடித்துவைக்க வேண்டும் என்று கூறினால், இந்த ஐகோர்ட்டு மனுதாரர் (முருகதாஸ்) விருப்பப்படி செயல்பட வேண்டுமா?’ என்று கண்டன கருத்து தெரிவித்தார்.
பின்னர், இந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.