இயக்குநர் அனுராக் காஷ்யப் பதிவுக்கு பதில் அளித்த நடிகர் விக்ரம்

பாலிவுட் சினிமாவில் மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் அனுராக் காஷ்யப். இவர் தமிழில் அதர்வா, நயன்தாரா நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்து தமிழ் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானார். இவர் இயக்கத்தில் ராகுல் பட், சன்னி லியோன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கென்னடி’. கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் அவருடைய ‘கென்னடி’ திரைப்படம் திரையிடப்பட்டதால் இந்த விழாவில் அனுராக் காஷ்யப் பங்கேற்றிருந்தார்.

அதன் பிறகு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது, இந்தப் படம் நடிகர் விக்ரமை மனதில் வைத்து எழுதியிருந்தேன். இதனால் தான் படத்திற்கும் ‘கென்னடி’ என்று பெயர் வைத்திருக்கிறேன். ஏனெனில் நடிகர் விக்ரமின் ஒரிஜினல் பெயர் ‘கென்னடி’. ஆனால் அவர் என் அழைப்புக்கு எந்த பதிலும் அளிக்காததால் வேறொருவரை தேர்ந்தெடுக்க வேண்டியதாயிற்று, அதன்படி இந்த படத்தில் நடிக்க நடிகர் ராகுல் சம்மதித்தார் என்று கூறி இருந்தார்.

இது குறித்த வீடியோ வைரலான நிலையில், நடிகர் விக்ரம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் இது தொடர்பாக விளக்கமளித்துள்ளார். அந்த பதிவில், “இந்தப் படத்திற்காக நீங்கள் என்னை தொடர்பு கொள்ள முயற்சித்ததாகவும் அதற்கு நான் பதிலளிக்கவில்லை என்றும் நண்பர் ஒருவர் மூலமாக அறிந்த உடன் உங்களை தொடர்பு கொண்டு எனக்கு உங்களுடைய எந்த மெயிலும், மெசேஜூம் வரவில்லை என தெரிவித்தேன்.

மேலும் நீங்கள் என்னை தொடர்பு கொண்ட மெயில் ஐடி மற்றும் தொடர்பு எண்ணை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே மாற்றிவிட்டேன் என்றும் அது தற்போது செயல்பாட்டில் இல்லை என்பதையும் விளக்கமளித்தேன். அந்த தொலைபேசி உரையாடலில் நான் சொன்னது போல, உங்களின் ‘கென்னடி’ படத்திற்காக நான் மிகவும் ஆர்வமாக இருக்கிறேன். காரணம் அது என்னுடைய பெயரை கொண்டிருப்பதால். அன்புடன் கென்னடி என்ற சீயான் விக்ரம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு பதில் அளித்துள்ள அனுராக் “முற்றிலும் சரி பாஸ் . மக்களின் தகவலுக்காக, வேறொரு நடிகரிடம் நான் அவரை தொடர்பு கொள்ள முயற்சிக்கிறேன் என்று அவர் கண்டறிந்த போது, அவர் என்னை நேரடியாக அழைத்தார், அவரிடம் வேறு வாட்ஸ் அப் எண் இருப்பதை நாங்கள் உணர்ந்தோம். அவர் என்னை அணுகுவதற்கு சரியான தகவலைக் கொடுத்தார், மேலும் ஸ்கிரிப்டைப் படிப்பதில் ஆர்வம் காட்டினார், ஆனால் அதற்குள் நாங்கள் அனைவரும் ஒரு மாத ஷூட்டிங்கில் இருந்தோம். படத்திற்கு “கென்னடி” என்ற பெயரைப் பயன்படுத்தவும் அவர் அனுமதி அளித்தார்.

நான் பேட்டியில் கூறியது பின்னால் உள்ள கதை, படம் எப்படி கென்னடி என்று அழைக்கப்பட்டது. சியானோ அல்லது நானோ ஒன்றாக வேலை செய்யாமல் ஓய்வு பெற மாட்டோம் என்று நிச்சயமாக நான் நினைக்கிறேன். நாம் சேது காலத்திற்கு முந்தைய காலத்திற்கு செல்கிறோம் என குறிப்பிட்டு உள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools