இயக்குநர்கள் மீது தேச துரோக வழக்கு – உச்ச நீதிமன்றத்திற்கு வேண்டுகோள் வைத்த கமல்ஹாசன்
இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிராக நடைபெறும் கும்பல் வன்முறையை தடுத்து நிறுத்த பிரதமர் நரேந்திரமோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து, திரைப்பட இயக்குனர் மணிரத்னம், நடிகை ரேவதி, சமூகவியலாளர், சமூக சேவகர், திரைப்பட தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட 49 முக்கிய பிரபலங்கள் பிரதமருக்கு கடிதம் எழுதினர்.
இந்த கடிதத்துக்கு எதிராக பீகார் மாநிலம், முசாபர்பூரைச் சேர்ந்த வக்கீல் சுதிர் குமார் ஓஜா, முசாபர்பூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததையடுத்து இயக்குனர் மணிரத்னம் உள்பட 49 பிரபலங்கள் மீது தேசத்துரோகம், பொதுமக்களுக்கு தொந்தரவு விளைவித்தல், மத உணர்வுகளை புண்படுத்துதல், அமைதியை குலைக்கும் வகையில் பேசுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பல பிரபலங்கள் இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறி தங்கள் கருத்துக்களை ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் பதிவு செய்தனர்.
இந்நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், “பிரதமர் ஒரு இணக்கமான இந்தியாவை நாடுகிறார். பாராளுமன்றத்தில் அவர் வெளியிட்ட அறிக்கைகள் அதை உறுதிப்படுத்துகின்றன. அரசு மற்றும் அதன் சட்டம் அதை கடிதத்திலும், உணர்வுகளிலும் பின்பற்ற வேண்டாமா? எனது சகாக்களில் 49 பேர் பிரதமரின் விருப்பத்திற்கு முரணாக தேசத்துரோக குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளனர்.
எங்கள் உச்சநீதிமன்றம் ஜனநாயக முறைப்படி நீதியை நிலைநாட்டவும், பீகாரில் தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யவும் ஒரு குடிமகனாக நான் கேட்டுக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.