X

இயக்குநர்கள் மற்றும் சின்னத்திரை நடிகர்களுக்கு உதவிய ரஜினிகாந்த்

கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமலில் உள்ளதால் திரைப்பட தொழிலாளர்கள், துணை நடிகர்-நடிகைகள், நாடக நடிகர்கள், உதவி இயக்குனர்கள் வருமானம் இன்றி கஷ்டப்படுகின்றனர். அவர்களுக்கு நடிகர்-நடிகைகள் பலர் நிதி மற்றும் உதவி பொருட்களை வழங்கி வருகிறார்கள்.

நடிகர் ரஜினிகாந்த் திரைப்பட தொழிலாளர்கள் சங்கமான ‘பெப்சி’க்கு ஏற்கனவே ரூ.50 லட்சம் நிதி வழங்கினார். தற்போது பல்வேறு சினிமா சங்கங்களுக்கும் உதவிகள் வழங்கி உள்ளார். தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கத்துக்கு 1,500 பேருக்கு உதவும் வகையில் 2 லாரிகளில் அரிசி மூட்டைகள் மற்றும் மளிகை பொருட்களை அனுப்பி உள்ளார்.

நலிந்த இயக்குனர்கள் மற்றும் துணை, இணை இயக்குனர்களுக்கு இவை வழங்கப்பட உள்ளன. தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்க தலைவர் ஆர்.கே.செல்வமணி, பொதுச்செயலாளர் ஆர்.வி.உதயகுமார், பொருளாளர் பேரரசு ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கேட்காமலேயே இயக்குனர் சங்கத்துக்கு நிவாரண உதவிகள் வழங்கிய ரஜினிகாந்துக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்’ என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

சின்னத்திரை நடிகர்கள் மற்றும் சின்னத்திரை இயக்குனர்கள் சங்கத்துக்கும் தலா 550 மூட்டை அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கி உள்ளார். இதற்காக ரஜினிகாந்துக்கு சின்னத்திரை இயக்குனர்கள் சங்க தலைவர் தளபதி நன்றி தெரிவித்துள்ளார். இதுபோல் சினிமா பி.ஆர்.ஓ. சங்க உறுப்பினர்கள் 71 பேருக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கி உள்ளார்.