தமிழில் பூ, மரியான், சென்னையில் ஒரு நாள், பெங்களூர் நாட்கள் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பார்வதி மலையாளத்திலும் முன்னணி நடிகையாக இருந்தார். கேரளாவில் நடிகை கடத்தல் வழக்கில் சிக்கிய திலீப்புக்கு எதிராக குரல் கொடுத்தார். மலையாள நடிகர் சங்கத்தில் திலீப்பை மீண்டும் சேர்த்த மோகன்லாலையும் கண்டித்தார்.
‘மீ டூ’வில் பாலியல் புகார் கூறும் பெண்களுக்கு ஆதரவாக மலையாள நடிகைகள் தொடங்கிய அமைப்பிலும் அங்கம் வகித்தார். இதனால் மலையாள நடிகர்கள் பார்வதியை தங்கள் படங்களில் ஒப்பந்தம் செய்வதை தவிர்த்தனர்.
இதுகுறித்து பார்வதி கூறும்போது, “நடிகைகள் பாதுகாப்புக்காக மலையாள திரைப்பட பெண்கள் கூட்டமைப்பை உருவாக்கினோம். அதன்பிறகு எனக்கு புதிய படங்களில் நடிக்க வாய்ப்பு தராமல் ஒதுக்குகிறார்கள். இந்தியில் ‘மீ டூ’வில் பாலியல் புகார் கூறும் நடிகைகளுக்கு பட வாய்ப்புகள் அளிக்கின்றனர். ஆனால் இங்கு ஒதுக்குகிறார்கள். பல வெற்றி படங்களை கொடுத்த எனக்கு ஒரு வருடமாக புதிய படங்கள் இல்லை” என்றார்.
இதையடுத்து பார்வதி டைரக்டராக மாற முடிவு செய்துள்ளார். இதற்காக இரண்டு கதைகளை எழுதி தயாராக வைத்துள்ளார். ஒரு கதை அரசியலை மையமாக கொண்டது. இன்னொன்று ‘சைக்கலாஜிக்கல் திரில்லர்’ கதை. சில மாதங்களில் நடிகர், நடிகைகளை தேர்வு செய்து படப்பிடிப்பை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.