இம்ரான்கான் கைது செய்யப்படுவார் – பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் தகவல்
பாகிஸ்தானில் ஆளும் ஷபாஸ் ஷெரீப் அரசுக்கு எதிராக முன்னாள் பிரதமர் இம்ரான்கான் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார். இந்த போராட்டங்களின்போது வன்முறையை தூண்டியதாக அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்குகளில் ஜாமீன் கோரி பெஷாவர் உயர் நீதிமன்றத்தில் இம்ரான் கான் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த தலைமை நீதிபதி குவாசிர் ரஷித், 3 வார காலங்கள் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.வரும் 25-ம் தேதி வரை இம்ரான் கானை கைது செய்யக்கூடாது என்று தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து பெஷாவரில் இருந்து இஸ்லாமாபாத் திரும்ப இம்ரான்கான் முடிவு செய்துள்ள நிலையில், இடைக்கால ஜாமீன் காலம் முடிந்ததும், இம்ரான்கான் கைது செய்யப்படுவார் என்று பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ராணா சனாவுல்லா தெரிவித்துள்ளார்.
இம்ரான் கானை இஸ்லாமாபாத்திற்கு வரவேற்கிறோம் என்று கூறியுள்ள ராணா, அவருக்கு சட்டப்படி பாதுகாப்பு அளிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார். இந்நிலையில், அமைச்சர் ராணா சனாவுல்லாவின் பானி காலா இல்லத்திற்கு வெளியே கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.