X

இம்சை அரசன் 24ம் புலிகேசி விரைவில் தொடங்கும் – இயக்குநர் சிம்புதேவன் அறிவிப்பு

வடிவேல் கதாநாயகனாக நடித்து 2006-ல் வெளிவந்த இம்சை அரசன் 23-ம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகத்தை ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ என்ற பெயரில் எடுக்க முடிவெடுக்கப்பட்டது.

இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில், சிம்புதேவன் இயக்கத்தில் உருவாக இருந்த இந்த படத்திலும் நடிகர் வடிவேலுவே நாயகனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதன் முதல்கட்ட படப்பிடிப்பை சென்னையில் அரண்மனை அரங்குகள் அமைத்து தொடங்கினார்கள். சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில், பல்வேறு பிரச்சினைகளில் இயக்குனருடன் தகராறு ஏற்பட்டு வடிவேலு படத்திலிருந்து விலகினார். இதனால் படப்பிடிப்பு பாதியில் நின்று போனது. அரங்கையும் பிரித்துவிட்டனர். இதனால் பலகோடிகள் நஷ்டம் ஏற்பட்டது.

இந்த பிரச்சினையை தயாரிப்பாளர் சங்கத்துக்கு கொண்டு போனார் இயக்குனர் ஷங்கர். வடிவேலுவிடம் தயாரிப்பாளர்கள் சங்கம் பேச்சுவார்த்தை நடத்தியது. இருப்பினும் முடிவு எட்டப்படவில்லை.

இதையடுத்து இயக்குநர் சிம்புதேவன் தனது அடுத்த படத்தை இயக்க சென்றுவிட்டார். ஷங்கரும் ரஜினியின் 2.0 படத்தில் பிசியாகிவிட்டார். இந்த நிலையில், சிம்புதேவன் தனது ட்விட்டர் பக்கத்தில், தனது அடுத்த படத்தின் பணிகள் முடிவடைந்துவிட்டதாகவும், இம்சை அரசன் 24-ஆம் புலிகேசி படத்தின் படப்பிடிப்பு முதலில் இருந்து மீண்டும் துவங்கப்படும் என்று தான் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.