பாகிஸ்தான்- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய 2-வது ஒரு நாள் போட்டி டர்பனில் நடந்தது. இதில் தென் ஆப்பிரிக்கா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 204 ரன் இலக்கை விளையாடிய தென் ஆப்பிரிக்கா 80 ரன்னுக்கு 5 விக்கெட்டை இழந்தது.
பெலக்வாயோ- வான்டெர் துஸ்சென் ஜோடி அபாரமாக விளையாடி வெற்றி பெற வைத்தது. இந்த ஆட்டத்தின் போது பெலக் வாயோவை பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் அகமது இன வெறியுடன் பேசியது ஸ்டம்ப் மைக்கில் பதிவானது. இது பெறும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையே சர்பிராஸ் அகமது டுவிட்டரில் மன்னிப்பு கேட்டு உள்ளார். அதில் எனது பேச்சு மூலம் யாராவது மனம் புண்பட்டு இருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். நான் யாரையும் குறிப்பிட்டும் நேரடியாகவும் எனது வார்த்தைகளை கூறவில்லை என்று தெரிவித்து உள்ளார்.
இந்த நிலையில் சர்பிராஸ் அகமதுவின் இனவெறியுடனான பேச்சு குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) விசாரணை நடத்துகிறது. இந்த விவகாரம் தொடர்பாக ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணை நடத்தும். இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் சர்பிராஸ் அகமதுவுக்கு 4 முதல் 8 வரை சஸ்பெண்டு புள்ளிகள் வழங்கப்படும்.
2 சஸ்பெண்டு புள்ளி பெறும் வீரருக்கு ஒரு டெஸ்ட் போட்டி அல்லது ஒரு நாள் போட்டிக்கு தடை விதிக்கும் வகையில் விதி உள்ளது. இதனால் சர்பிராஸ் அகமதுவுக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது.