Tamilவிளையாட்டு

இன்றைய ஒலிம்பிக் பதக்கங்கள் விவரம்

ஒலிம்பிக் மல்யுத்தம் – இந்திய வீராங்கனை வினேஷ் போகத் காலியிறுதிக்கு முன்னேற்றம்

மல்யுத்தம் போட்டியில் பெண்களுக்கான 53 கிலோ எடைப்பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றுகள் இன்று காலை நடைபெற்றன. ஒரு போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத்- சோபியா மேக்டலினா (சுவீடன்) மோதினார்கள்.

ஆறு நிமிடம் கொண்ட போட்டியில் முதல் மூன்று நிமிடங்களில் சுவீடன் வீராங்கனையை மடக்கி வினேஷ் போகத் 2,2,1 என புள்ளிகள் பெற்று 5-0 என முன்னிலை பெற்றார். 2-வது மூன்று நிமிடங்களில் மேலும் 2 புள்ளிகள் பெற்றார். சுவீடன் வீராங்கனையால் ஒரு புள்ளி மட்டுமே பெற முடிந்தது.

இதனால் வினேஷ் போகத் 7-1 என வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். இன்று மதியம் 12.30 மணியளவில் நடைபெறும் காலிறுதியில் பெலாரஸ் வீராங்கனை கலாட்ஜின்ஸ்கயாவை எதிர்கொள்கிறார்.
—————-
ஒலிம்பிக் ஆண்கள் ஆக்கி – இந்திய அணி வெண்கலப்பதக்கம் வென்றது

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான ஆக்கி போட்டியில்  வெண்கல பதக்கத்திற்கான போட்டி இன்று காலை நடைபெற்றது. இதில் இந்திய அணி ஜெர்மனியை எதிர்கொண்டது.

ஆட்டம் தொடங்கிய 2-வது நிமிடத்திலேயே இந்திய அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஜெர்மனி வீரர் டிமுர் ஒருஸ் கோல் அடித்தார். இதனால் ஜெர்மனி 1-0 என முன்னிலை பெற்றது. அதன்பின் முதல் கால் பகுதி நேர ஆட்ட முடிவில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.

2-வது கால் பகுதி ஆட்டத்தில் ஜெர்மனிக்கு இந்திய அணி பதிலடி கொடுத்தது. ஆட்டம் தொடங்கிய 2-வது நிமிடத்தில் அதாவது 17-வது நிமிடத்தில் சிம்ரஞ்ஜீத் சிங் அபாரமாக கோல் அடித்தார். இதனால் ஸ்கோர் 1-1 என முன்னிலைப் பெற்றது.

ஜெர்மனி வீரர் ஃபர்க் 25-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். அதற்கு பதிலடியாக ஹர்திக் சிங் மற்றும் ஹர்மன்ப்ரீத் சிங் முறையே 27 மற்றும் 29-வது நிமிடங்களில் கோல் அடித்து அசத்தினர். இதனால் 2-வது கால் பகுதி ஆட்டம் முடிவில் ஸ்கோர் 3-3 என சமநிலை பெற்றது.

3-வது கால் பகுதி ஆட்டத்தில் இந்திய வீரர்களின் ஆட்டம் அபாரமாக இருந்தது. 3-வது கால் பகுதி ஆட்டம் தொடங்கிய முதல் நிமிடத்திலேயே, அதாவது ஆட்டத்தின் 31-வது நிமிடத்தில் ருபீந்தர் பால் சிங் கோல் அடித்தார். அதோடு அல்லாமல் 34-வது நிமிடத்தில் சிம்ரஞ்ஜீத் சிங் கோல் அடித்தார். இதனால் 3-வது கால் பகுதி ஆட்டத்தில் இந்தியா 5-3 என முன்னிலைப் பெற்றிருந்தது.

4-வது மற்றும் கடைசி கால் பகுதி ஆட்டம் தொடங்கியது. 48-வது நிமிடத்தில் ஜெர்மனியின் வண்ட்பெடர் கோல் அடிக்க இந்தியாவின் ஸ்கோர் 5-4 என ஆனது.

ஜெர்மனி வீரர்கள் கோல் அடிக்க முயற்சி செய்ய, இந்திய வீரர்கள் தடுப்பதில் ஆர்வம் காட்டினர். 10-வது நிமிடத்தில் இந்திய அணிக்கு சூப்பர் வாய்ப்பு கிடைத்தது. கோல் எல்லையில் ஜெர்மனி கோல் கீப்பரை தவிர எதிரணி வீரர்கள் யாரும் இல்லை. ஆனால் இந்திய வீரர் ஹர்மன்ப்ரீத் சிங் கோல் அடிக்க தவறினார்.

7 நிமிடம் இருக்கும்போது ஜெர்மனிக்கு கார்னர் வாய்ப்பு கிடைத்தது. அதில் கோல் அடிக்க  விடாமல் இந்திய வீரர்கள் அருமையாக தடுத்தனர்.

3-வது நிமிடத்தில் ஜெர்மனி அணிக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. இந்த முறையில் இந்திய வீரர்கள் சிறப்பாக தடுத்தனர். கடைசி ஒன்றரை நிமிட ஆட்டத்தில் அனல் பறந்தது. இந்திய வீரர்கள் ஜெர்மனியை கோல் அடிக்க விடாமல் சிறப்பாக தடுத்தனர். ஒரு வினாடியைக் கூட வீணடிக்காமல் ஜெர்மனி கோல் அடிக்க முயற்சி செய்தது.

7 வினாடிகள் இருக்கும்போது ஜெர்மனிக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. அதையும் இந்திய வீரர்கள் முறியடிக்க 5-4 என இந்தியா வெற்றி பெற்று வெண்கலப் பதக்கம் வென்றது.

இதன் மூலம் 41 வருடத்திற்கு பிறகு ஒலிம்பிக்கில் இந்திய ஆடவர் அணி வெண்கலப் பதக்கத்தை ருசித்துள்ளது.
———————–
ஒலிம்பிக் பதக்கப் பட்டியல் – 1 வெள்ளி, 3 வெண்கலத்துடன் இந்தியா 66 வது இடத்தை பிடித்தது

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி ஜெர்மனியை 5-4 என வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றது. இதன்மூலம் இந்தியா ஒரு வெள்ளி, மூன்று வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது. நான்கு பதக்கங்களுடன் இந்தியா பதக்க பட்டியலில் 66-வது இடத்தை பிடித்துள்ளது.

மல்யுத்தம் போட்டியில் ரவிக்குமார் தாஹியா வெள்ளி வென்றால் இந்தியா 59-வது இடத்திற்கு முன்னேறும். தங்கம் வென்றால் 43-வது இடத்திற்கு முன்னேற வாய்ப்புள்ளது.

சீனா 32 தங்கம், 23 வெள்ளி, 16 வெண்கலப் பதக்கங்களுடன் முதலிடம் வகிக்கிறது. 27 தங்கம், 33 வெள்ளி, 24 வெண்கலப் பதக்கங்களுடன் அமெரிக்கா 2-வது இடத்தை பிடித்துள்ளது.

போட்டியை நடத்தும் ஜப்பான் 21 தங்கம், 7 வெள்ளி, 12 வெண்கலப் பதக்கங்களுடன் 3-வது இடத்தை பிடித்துள்ளது.