இன்றைய ஒலிம்பிக் பதக்கங்கள் விவரம்
ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் – 50மீ ரைபிள் 3 பொசிசன்ஸில் இந்திய வீராங்கனைகள் ஏமாற்றம்
பெண்களுக்கான துப்பாக்கிச்சுடுதலில் 50மீ ரைபிள் 3 பொசிசன்ஸ் போட்டியின் தகுதிப்பிரிவு இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியாவின் அன்ஜூம் மவுத்கில், தேஜஸ்வினி சவந்த் ஆகிய வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
நீலிங் (Kneeling), ப்ரோன் (Prone), ஸே்டேண்டிங் (Standing) ஆகிய மூன்று முறைகளில் சுடுதல் வேண்டும். மவுத்கில் நீலிங் முறையில் 99, 98, 96, 97 (390), ப்ரோன் முறையில் 98, 100, 98, 99 (395), ஸ்டேண்டிங் 94, 96, 95, 97 (382) புள்ளிகள் பெற்றார். மொத்தமாக 1167-54x புள்ளிகளுடன் 15-வது இடம் பிடித்தார்.
தேஜஸ்வினி சவந்த் நீலிங் முறையில் 97, 92, 98, 97 (384), ப்ரோன் முறையில் 99, 98, 99, 98 (394), ஸ்டேண்டிங் 94, 93, 95, 94 (376) புள்ளிகள் பெற்றார். மொத்தமாக 1154-50X புள்ளிகளுடன் 33-வது இடம் பிடித்தார்.
இப்பிரிவில் முதல் 8 இடங்களை பிடிக்கும் வீராங்கனைகள் இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியும் என்பதால் இருவரும் இறுதிச்சுற்றுக்கான வாய்ப்பை இழந்தார்.
—————
டோக்கியோ ஒலிம்பிக் – ஊக்க மருந்து பயன்படுத்திய நைஜீரியா தடகள வீராங்கனை சஸ்பெண்டு
நைஜீரியாவைச் சேர்ந்த தடகள வீராங்கனை பிளஸ் சிங் ஒகாபர்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இன்று நடைபெறும் பெண்களுக்கான 100 மீட்டர் அரை இறுதியில் பங்கேற்க தகுதி பெற்று இருந்தார்.
அவர் நேற்று நடந்த தகுதி சுற்றில் 11.05 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து முன்னேறினார்.
இந்த நிலையில் நைஜீரிய தடகள வீராங்கனை ஒகாபர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். அவர் உடல் பலத்தை அதிகரித்துக் கொள்வதற்கான ஊக்க மருந்தை பயன்படுத்தி இருந்தது தெரிய வந்தது.
கடந்த 19-ந்தேதி நடந்த போட்டியில் அவர் ஊக்க மருந்தை உட்கொண்டுள்ளார். இதைத் தொடர்ந்து தடகள ஒருமைப்பாட்டுக் குழு அவரை தற்காலிகமாக சஸ்பெண்டு செய்துள்ளது.
இந்த சஸ்பெண்டு காரணமாக இன்று நடைபெறும் 100 மீட்டர் பந்தயத்தில் அவரால் பங்கேற்க முடியாது.
—————
ஒலிம்பிக் பெண்கள் ஹாக்கி – கடைசி லீக்கில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா வெற்றி
இந்திய பெண்கள் ஹாக்கி அணி ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ளது. இதே பிரிவில் நெதர்லாந்து, ஜெர்மனி, கிரேட் பிரட்டன், அயர்லாந்து, தென்ஆப்பிரிக்கா அணிகள் இடம் பிடித்துள்ளன.
நெதர்லாந்துக்கு எதிராக 1-5, ஜெர்மனிக்கு எதிராக 0-2, கிரேட் பிரிட்டனுக்கு எதிராக 1-4 என வரிசையாக படுதோல்வியடைந்தது. 4-வது லீக்கில் அயர்லாந்தை 1-0 என வீழ்த்தி காலிறுதி வாய்ப்புக்கான வாய்ப்பை தக்கவைத்திருந்தது.
இந்த நிலையில் இன்று தென்ஆப்பிரிக்காவை எதிர்கொண்டது. ஆட்டம் தொடங்கிய 4-வது நிமிடத்திலேயே இந்திய வீராங்கனை வந்தனா கட்டாரியா முதல் கோல் அடித்தார். முதல் கால் பகுதியின் ஆட்ட முடிவின் கடைசி நிமிடத்தில் தென்ஆப்பிரிக்கா பதில் கோல் அடித்தது. இதனால் முதல் கால் பகுதியில் 1-1 என இரு அணிகளும் சமநிலை பெற்றன.
2-வது கால்பகுதி ஆட்டம் தொடங்கியதும் இந்திய வீராங்கனை கட்டாரியா 17-வது நிமிடத்தில் மேலும் ஒரு கோல் அடித்தார். ஆட்டம் முடியும் நேரத்தில் தென்ஆப்பிரிக்காவின் ஹன்டர் கோல் அடித்தார். இதனால் 2-வது கால் பகுதி ஆட்டம் முடிவில் 2-2 என சமநிலை பெற்றன.
3-வது காலிறுதி நேரத்தில் இந்தியா 32-வது நிமிடத்திலும் (நேஹா), தென்ஆப்பிரிக்கா 39-வது நிமிடத்திலும் கோல் அடித்தன. 4-வது கால்பகுதி ஆட்டத்தில் இந்தியாவின் கட்டாரியா 49-வது நிமிடத்தில் மேலும் ஒரு கோல் அடிக்க, தென்ஆப்பிரிக்கா வீராங்கனைகளால் அதற்கு பதில் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் இந்திய பெண்கள் அணி 4-3 என வெற்றி பெற்றது.
—————-
ஒலிம்பிக் பதக்க பட்டியல் – சீனா முதலிடம்
டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று காலை நிலவரப்படி சீனா 19 தங்கம், 11 வெள்ளி, 11 வெண்கலப் பதக்கங்களுடன் முதல் இடத்தில் உள்ளது. ஜப்பான் 17 தங்கம், 4 வெள்ளி, 7 வெண்கலப் பதக்கங்களுடன் 2-வது இடத்தில் உள்ளது. அமெரிக்கா 16 தங்கம், 17 வெள்ளி, 11 வெண்கலப் பதக்கங்களுடன் 3-வது இடத்தில் உள்ளது.
எண்ணிக்கை அடிப்படையில் அமெரிக்கா (44) முதல் இடமும், சீனா (41) 2-வது இடத்திலும், ரஷ்யா (34) 3-வது இடத்திலும், ஜப்பான் (28) 4-வது இடத்திலும், 26 எண்ணிக்கையுடன் ஆஸ்திரேலியா ஐந்தாவது இடத்திலும் உள்ளன.
—————–
ஒலிம்பிக் நீச்சல் போட்டி – அமெரிக்கா 2 தங்கம் வென்றது
டோக்கியோ ஒலிம்பிக் நீச்சல் போட்டியில் இன்று நான்கு போட்டிகளின் இறுதிப்போட்டி நடைபெற்றது. ஆண்களுக்கான 100மீ பட்டர்ஃப்ளை இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் அமெரிக்காவின் டிரெஸ்சல் தங்கப்பதக்கம் வென்றார். ஹங்கேரியின் மிலாக் வெள்ளிப்பதக்கமும், சுவிட்சர்லாந்தின் போன்ட்டி வெண்கலப்பதக்கமும் வென்றனர்.
பெண்களுக்கான 200மீ பேக்ஸ்ட்ரோக் பிரிவில் ஆஸ்திரேலியாவின் மெக்கியோன் தங்கப்பதக்கம் வென்றார். கனடாவின் கைல் மாஸ்சே வெள்ளிப்பதக்கமும், ஆஸ்திரேலியாவின் சீபோம் வெண்கலப்பதக்கமும் வென்றனர்.
பெண்களுக்கான 800மீ ஃப்ரீஸ்டைல் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவின் லெடெக்கி தங்கப்பதக்கம் வென்றார். ஆஸ்திரேலியாவின் டிட்மஸ் வெள்ளிப்பதக்கம் வென்றார். இத்தாலியின் குயடெரெல்லா வெண்கப்பதக்கம் வென்றார்.
மிக்ஸ்டு 4×100மீ மிட் ரிலே பிரிவில் கிரேட் பிரிட்டன் தங்கப்பதக்கம், சீனா வெள்ளிப்பதக்கம், ஆஸ்திரேலியா வெண்கல பதக்கம் வென்றது.
—————-
ஒலிம்பிக் வில்வித்தை – 3 தங்கம் வென்ற தென் கொரிய வீராங்கனை
வில்வித்தை பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியவர் தென் கொரியாவின் ஷான் அன். எந்தவித பதற்றமின்றி ஷான் அன் அம்புகளை எய்தினார். இதனால் தொடர்ந்து மூன்று ஷெட்டுகளை தொடர்ந்து கைப்பற்றி வெற்றி பெற்றார்.
இவ்வளவு துல்லியமாக விளையாடுகிறாரே என இந்திய ரசிகர்கள் ஆச்சரியமாக பார்த்த நிலையில், வில்வித்தையில் மூன்று தங்கப்பதக்கங்களை வென்று அசத்தியுள்ளா் ஷான் அன்.
கடந்த 24-ந்தேதி நடைபெற்ற கலப்பு அணி பிரிவில் நெதர்லாந்து அணிக்கெதிராக ஜி டியோக் கிம் உடன் இணைந்து வெற்றி பெற்றார்.
25-ம் தேதி நடைபெற்ற பெண்கள் அணியில் ஜாங், காங் உடன் இணைந்து தங்கப்பதக்கம் வென்றார். நேற்று நடைபெற்ற ஒற்றையர் பிரிவிலும் தங்கப்பதக்கம் வென்றார்.