Tamilவிளையாட்டு

இன்றைய ஒலிம்பிக் பதக்கங்கள் விவரம்

ஒலிம்பிக் ஆக்கி – இந்திய மகளிர் அணி காலியிறுதிக்கு முன்னேற்றம்

32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த 23-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது.  இதில் மகளிர் பிரிவு ஆக்கி போட்டியில் இன்றைய ஆட்டத்தில் இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகள் விளையாடின.

போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே காலிறுதியை எட்ட கூடிய சூழலில் இந்தியா இருந்தது.  இந்த போட்டியின் முதல் 3 கால் மணிநேர போட்டியில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை.

இந்நிலையில், வாழ்வா, சாவா? என்ற நிலையில் இருந்த இந்திய அணியில் 57-வது நிமிடத்தில் வீராங்கனை நவ்னீத் கவுர் ஒரு கோல் அடித்து அயர்லாந்து அணிக்கு அதிர்ச்சி ஏற்படுத்தினார்.

இதனால், போட்டி நேர முடிவில் இந்தியா 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.  இதனால், இந்திய மகளிர் ஆக்கி அணியின் காலிறுதி கனவு நனவாகியுள்ளது.
————————–
ஒலிம்பிக் பேட்மிண்டன் – கலப்பு இரட்டையர் பிரிவில் ஜப்பான் வெண்கலம் வென்றது

டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டனில் இன்று கலப்பு இரட்டையர் ஜோடிக்கான வெண்கல பதக்க போட்டி நடைபெற்றது. இதில் ஜப்பான் ஜோடி (யுடா வடானாபே- அரிசா ஹிகாஷினோ) ஹாங்காங்கின் சுன் மான் டாங்- சுயட் சி யிங்  ஜோடியை எதிர்கொண்டது.

ஜப்பான் ஜோடி முதல் கேம்-ஐ  21-17 எனக் கைப்பற்றியது. 2-வது செட்டில் ஹாங்காங் ஜோடி கடும் நெருக்கடி கொடுத்தது. என்றாலும் ஜப்பான் ஜோடி 2-வது செட்டை 23-21 எனக்கைப்பற்றி வெண்கல பதக்கத்தை உறுதி செய்தது.
————–
ஒலிம்பிக் குத்துச்சண்டை – இந்திய வீராங்கனை லோவ்லினா அரையிறுதிக்கு முன்னேற்றம்

குத்துச்சண்டை பெண்களுக்கான வெல்டர் (64-69 கிலோ) பிரிவு காலிறுதி ஆட்டங்கள் இன்று நடைபெற்றன. 2-வது காலிறுதியில் இந்திய வீராங்கனை லோவ்லினா போர்கோஹைன் சீன தைஃபேயின் நின்-சின்-சென்னை எதிர்கொண்டார்.

இதில் லோவ்லினா 4:1 (30-27, 29-28, 28-29, 30-27, 30-27) என அசத்தல் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். அரையிறுதிக்கு முன்னேறியதன் மூலம் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.

அரையிறுதி போட்டிகளில் தோல்வியடையும் வீராங்கனைகளுக்கு வெண்கல பதக்கம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
———————-
ஒலிம்பிக் பெண்கள் குத்துச்சண்டை – இந்திய வீராங்கனை சிம்ரஞ்சித் கவுர் தோல்வி

குத்துச்சண்டை போட்டியில் இன்று பெண்களுக்கான லைட்வெயிட் (57-60 கிலோ) பிரிவு சுற்றுகள் நடைபெற்று வருகின்றன. இந்திய வீராங்கனை சிம்ரஞ்சித் கவுர் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் தாய்லாந்தை சேர்ந்த சுடாபோர்ன் சீசோண்டீயை எதிர்கொண்டார்.

தாய்லாந்து வீராங்கனை மூன்று சுற்றிலும் சிம்ரஞ்சித்துக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டார்.

இதனால் ஐந்து நடுவர்களிடமும் தாய்லாந்து வீராங்கனை சுடாபோர்ன் சீசோண்டீ 30-27, 30-27, 30-27, 30-27, 30-27 என புள்ளிகள் பெற்று 5:0 என்ற கணக்கில் இந்திய வீராங்கனை சிம்ரஞ்சித் கவுரை வீழ்த்தினார்.
——————-
ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் – 25 மீ ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனைகள் தோல்வி

பெண்களுக்கான 25 மீ ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் ஒற்றையர் பிரிவில் இந்தியா சார்பில் மானு பாகெர், ராகி சர்னோபாட் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்தப் போட்டி பிரிசிசன், ரேபிட் ஆகிய தகுதிச்சுற்றுகள் மூலம் நடத்தப்படும். இரு பிரிவுகளின் தகுதிச்சுற்றில் அதிக புள்ளிகள் பெறுபவர்களில் முதல் 8 பேர் இறுதிச்சுற்றுக்கு முன்னேறுவார்கள்.

இன்று காலை ரேபிட் தகுதிச்சுற்று நடைபெற்றது. இதில் மானு பாகெர் 96, 97, 97 என 290 புள்ளிகள் பெற்றார். ராகி சர்னோபாட் 96, 94, 96 என 286 புள்ளிகள் பெற்றார்.

ஒட்டுமொத்தமாக மானு பாகெர் 582-17x, சர்னோபாட் 573-23 X புள்ளிகள் பெற்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தனர்.
———————–
ஒலிம்பிக் 3000 மீட்டர் தடை ஓட்டம் – இந்திய வீரர் இறுதிச்சுற்றுக்கான வாய்ப்பை இழந்தார்

டோக்கியோ ஒலிம்பிக்கில் 3000 மீட்டருக்கான தடை தாண்டிய ஓட்டம் இன்று காலை நடைபெற்றது. இதில் இந்திய வீரர் அவினாஷ் சப்லே பந்தய தூரத்தை 8 நிமிடம் 18:12 விநாடிகளில் கடந்து 7ம் இடம் பிடித்தார்.

முதல் 3 நபர்களே அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும் என்பதால் இறுதிச்சுற்றுக்கான வாய்ப்பை இழந்து வெளியேறினார்.