ஒலிம்பிக் வில்வித்தை – இந்திய வீரர் பிரவீன் ஜாதவ் 2 வது சுற்றில் தோல்வி
வில்வித்தை ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் பிரவீன் ஜாதவ் முதல் சுற்றில் ரஷ்யாவின் கால்சனை எதிர்கொண்டார். உலகத்தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள கால்சனுக்கு எதிராக பிரவீன் ஜாதவ் சிறப்பான வகையில் அம்புகளை எய்தார். இதனால் 6-0 என்ற செட் பாயிண்ட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்று முன்னேறினார்.
2-வது சுற்றில் அமெரிக்காவின் பிரேடி எல்லிசனை எதிர்கொண்டார். இந்த முறை பிரவீன் ஜாதவால் திறம்பட அம்புகளை தொடுக்க முடியவில்லை இதனால் 0-6 எனத் தோல்வியடைந்து போட்டியில் இருந்து வெளியேறினார்.
—————
ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் – இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற ஜப்பான் வீராங்கனை விலகல்
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. ஒருபக்கம் கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தி வருகிறது. ஒலிம்பிக் கிராமத்தில் உள்ள பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. என்றாலும் மறுபக்கம் நாட்டிற்கு பெருமை சேர்ப்பதற்காக வீரர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அமெரிக்காவின் முன்னணி ஜிம்னாஸ்டிக் வீராங்கனை சிமோன் பைல்ஸ். இவர் பெண்களுக்கான ஆல்-ரவுண்ட் பிரிவில் சக வீராங்கனைகள் மூன்று பேருடன் தகுதிச்சுற்றில் கலந்து கொண்டார்.
அமெரிக்க அணி தகுதிச்சுற்றில் சிறப்பாக செயல்பட்டு இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இறுதிப்போட்டி நாளை நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் அமெரிக்க அணியில் இடம் பிடித்திருந்த சிமோன் பைல்ஸ் திடீரென இறுதிப்போட்டியில் பங்கேற்கமாட்டேன் எனத்தெரிவித்துள்ளார்.
மனஅழுத்தம் காரணமாக ஒலிம்பிக் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள நிலையில், அமெரிக்க ஜிம்னாஸ்டிக் அசோசியேசன் சிமோன் முடிவை உறுதி செய்துள்ளது. தகுதிச்சுற்றில் தனிப்பட்ட முறையில் முதல் இடம் பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
———————
ஒலிம்பிக் ஹெவிவெயிட் குத்துச்சண்டை – மொராக்கோ வீரரை வீழ்த்தி நியூசிலாந்து வீரர் வெற்றி
டோக்கியோ ஒலிம்பிக்கில் ஹெவிவெயிட் குத்துச்சண்டை போட்டியின் முதல் சுற்றில் நியூசிலாந்தின் டேவிட் நிகா- மொராக்கோவின் யூனெஸ் பால்லா ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர்.
போட்டி தொடங்கியதில் இருந்து நியூசிலாந்து வீரர் டேவிட் மோராக்கோ வீரருக்கு பஞ்ச் கொடுத்துக் கொண்டே இருந்தார். இதனால் யூனெஸ் போட்டியில் தொடர்ந்து பின்தங்கி கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் 0-3 என பின்தங்கியதால் யூனெஸ் நிதானம் இழந்து டேவிட்டின் காதை கடிக்க முயன்றார்.
உடனடியாக சுதாரித்துக்கொண்ட டேவிட், யூனெஸ்-ஐ தள்ளிவிட்டு காதை காப்பாற்றிக்கொண்டார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த போட்டியில் டேவிட் 5-0 என வெற்றி பெற்றார்.
இந்த சம்பவம் மைக்டைசன் ஹொலிபீல்டு காதை கடித்தது ஞாபகத்திற்கு வந்தது.
——————
டோக்கியோ ஒலிம்பிக் – பதக்க பட்டியலில் தொடர்ந்து முதலிடம் வகிக்கும் ஜப்பான்
டோக்கியோ ஒலிம்பிக்கில் போட்டியை நடத்தும் ஜப்பான் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, சீன நாடுகளுக்கு கடும் சவாலாக விளங்கி வருகிறது.
இன்று காலை 10.30 நிலவரப்படி ஜப்பான் 11 தங்கம், 4 வெள்ளி, 5 வெண்கலம் என 20 பதக்கங்களுடன் முதலிடம் வகிக்கிறது. அமெரிக்கா 10 தங்கம், 10 வெள்ளி, 9 வெண்கலம் என 29 பதக்கங்களுடன் 2-வது இடம் பிடித்துள்ளது. சீனா 10 தங்கம், 5 வெள்ளி, 8 வெண்கலத்துடன் 3-வது இடம் பிடித்துள்ளது.
ரஷ்யா 7 தங்கம், 8 வெள்ளி, 4 வெண்கல பதக்கங்களுடன் 4-வது இடத்தை பிடித்துள்ளது. ஆஸ்திரேலியா 6 தங்கம், 1 வெள்ளி, 8 வெண்கலத்துடன் 15 பதக்கங்களுடன் 5-வது இடத்தை பிடித்துள்ளது.
இந்தியா ஒரு வெள்ளியுடன் 41-வது இடத்தில் உள்ளது.
—————————–
ஒலிம்பிக் வில்வித்தை ஆண்கள் ஒற்றையர் பிரிவு – 2 வது சுற்றில் இந்திய வீரர் தருண்தீப் ராய் தோல்வி
வில்வித்தை போட்டியில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு போட்டிகள் இன்று தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்தியாவின் தருண்தீப் ராய் முதல் சுற்றில் உக்ரைன் வீரர் ஒலெக்சீ ஹன்பின்-ஐ எதிர்கொண்டார். இதில் 1-1 (25-25), 1-3 (27-28), 2-4 (27-27), 4-4(26-24), 6-4 (28-25) என 6-4 செட் பாயிண்ட்-ல் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
2-வது சுற்றில் இஸ்ரேலை சேர்ந்த இட்டே ஷன்னியை எதிர்கொண்டார். தருண்தீப் ராய்க்கு இஸ்ரேல் வீரர் இட்டே கடும் சவாலாக விளங்கினார். முதல் செட்டை இட்டே 28-24 என கைப்பற்றினார். 2-வது செட்டை தருண்தீப் ராய் 27-26 என கைப்பற்றினார்.
3-வது செட்டில் (27-27) இருவரும் சமமான புள்ளி பெற்று 1 பாயிண்ட் பெற்றனர். 4-வது செட்டை தருண்தீப் சாய் (28-27) என கைப்பற்றினார். இதனால் தருண்தீப் ராய் 5-3 என முன்னிலை பெற்றிருந்தார். 5-வது மற்றும் கடைசி செட்டை டிரா செய்தாலே 6-4 என செட் பாயிண்ட் பெற்று வெற்றி பெற்றுவிடலாம் என தருண்தீப் ராய் நினைத்த நிலையில், 5-வது செட்டை 27-28 என இழந்தார்.
இதனால் ஐந்து செட்கள் முடிவில் இருவரும் 5-5 என செட் பாயிண்ட்கள் பெற்று சமம் அடைந்தனர். இதனால் ஷூட்-ஆஃப் பாயிண்ட் முறை கடைபிடிக்கப்பட்டது. இஸ்ரேல் வீரர் ஷன்னி முதல் அம்மை எய்து 10 புள்ளிகள் பெற்றார். ஆனால் தருண்தீப் ராயால் 9 புள்ளிகளே பெற முடிந்தது. இதனால் தருண்தீப் ராய் 5-6 என தோல்வியடைந்து வெளியேறினார்.