காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை பயணத்தை கன்னியாகுமரியில் தொடங்கினார். காஷ்மீர் வரை 150 நாட்களில் 3,500 கிலோ மீட்டர் தூரம் பாத யாத்திரை மேற்கொள்கிறார். இதற்கான தொடக்க விழா நிகழ்ச்சி நேற்று முன்தினம் கன்னியாகுமரியில் நடந்தது. முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் தேசிய கொடியை வழங்கி ராகுல்காந்தியின் பாதயாத்திரையை தொடங்கி வைத்தார்.
2-வது நாளான நேற்று அகஸ்தீஸ்வரம் முதல் நாகர்கோவில் வரை 17 கிலோ மீட்டர் தூரம் பாதயாத்திரை மேற்கொண்டார். நேற்றிரவு நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் 2-வது நாள் பாத யாத்திரையை நிறைவு செய்தார். அங்கு கேரவன் வேனில் தங்கி இருந்தார்.
இன்று காலையில் ராகுல்காந்தி, 3-வது நாள் பாதயாத்திரை தொடங்கினார். முன்னதாக தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். இதில் எல்லை போராட்ட தியாகி கொடிக்கால் ஷேக் அப்துல்லா பங்கேற்றார். இதை தொடர்ந்து காலை 7 மணிக்கு பாத யாத்திரையை ராகுல்காந்தி தொடங்கினார்.
தொண்டர்கள் புடை சூழ ராகுல்காந்தி பாத யாத்திரை மேற்கொண்டார். அவருடன் எம்.பி.க்கள் விஜய்வசந்த், ஜோதிமணி, ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ., மாநில துணை தலைவர் ராபர்ட் புரூஸ், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் முன்னாள் பொதுச்செயலாளர் ஏஞ்சலின் ஷரோனா, நாகர்கோவில் மாநகராட்சி மண்டல தலைவர் செல்வக்குமார் உள்பட பலர் பாத யாத்திரையில் கலந்து கொண்டனர்.
ராகுல்காந்திக்கு சாலையின் இருபுறமும் திரண்டு நின்று பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர். பார்வதிபுரம், சுங்கான் கடை வழியாக சுமார் 12 கிலோ மீட்டர் தூரம் ராகுல் காந்தி பாத யாத்திரையாக சென்று புலியூர்குறிச்சி சென்றடைந்தார். அங்குள்ள புனித தேவசகாயம் திருத்தலத்தை சென்றடைந்தார். காலை 7 மணிக்கு பாத யாத்திரையை தொடங்கிய அவர், 2½ மணி நேரத்தில் 12 கிலோ மீட்டர் தூரத்தை கடந்தார்.
பாத யாத்திரை மேற்கொண்டபோது காங்கிரஸ் தொண்டர்களுடன் விவசாய சங்க நிர்வாகிகளும் அவருடன் சென்றனர். தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் மற்றும் நிர்வாகிகளும் அவருடன் சென்றனர்.