இன்று ரஷியா அதிபரை சந்திக்கிறார் பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக இன்று ரஷியாவுக்கு செல்கிறார். ரஷியாவின் விலாடிவோஸ்டோக் நகரில் கிழக்கத்திய பொருளாதார அமைப்பின் கூட்டம் நடக்கிறது.

ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் அழைப்பின்பேரில், அக்கூட்டத்தில் பங்கேற்க மோடி ரஷியாவுக்கு செல்கிறார். விலாடிவோஸ்டோக்கில் உள்ள கப்பல் கட்டும் தளத்துக்கு புதினுடன் செல்கிறார். கப்பல் கட்டும் தொழிலில் பயன்படுத்தப்படும் உயர் தொழில்நுட்பத்தை பார்வையிடுகிறார்.

பிரதமர் மோடிக்கு புதின் இரவு விருந்து அளிக்கிறார். அதைத்தொடர்ந்து இருவரும் இருநாட்டு பிரதிநிதிகளுடன் உயர்மட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறார்கள்.

நாளை (வியாழக்கிழமை) காலையில் பிரதமர் மோடி சில இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுகிறார். கிழக்கத்திய பொருளாதார அமைப்பின் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். தனது நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு, நாளையே அவர் இந்தியாவுக்கு புறப்படுகிறார்.

ரஷிய பயணத்தையொட்டி, பிரதமர் மோடி நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

என் நண்பர் புதினுடன் இருதரப்பு உறவின் அனைத்து அம்சங்கள் மற்றும் பிராந்திய, சர்வதேச விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த ஆவலாக இருக்கிறேன். எனது பயணம், இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த இரு நாடுகளும் கொண்டுள்ள ஆர்வத்தை கோடிட்டுக் காட்டுகிறது.

அதுபோல், கிழக்கத்திய பொருளாதார அமைப்பின் கூட்டத்தில் பங்கேற்க வரும் உலக தலைவர்களை சந்திப்பதற்கும் ஆவலாக இருக்கிறேன். இந்திய தொழில் மற்றும் வர்த்தக பிரதிநிதிகளையும் சந்திக்க உள்ளேன்.

இந்தியாவும், ரஷியாவும் சிறப்பான நல்லுறவை பராமரித்து வருகின்றன. பாதுகாப்பு, சிவில் அணுசக்தி, விண்வெளி பயன்பாடு ஆகியவற்றில் ஒத்துழைப்புடன் செயல்பட்டு வருகிறோம். வர்த்தக, முதலீட்டு உறவும் வளர்ந்து வருகிறது. இவ்வாறு மோடி கூறியுள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools