Tamilசெய்திகள்

இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம் – தலைவர்கள் வாழ்த்து

ரம்ஜான் பண்டிகை இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படும் நிலையில் குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் நாட்டு மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்  தெரிவித்திருப்பதாவது:

ரம்ஜான் பண்டிகையையொட்டி, குடிமக்கள் அனைவருக்கும் குறிப்பாக நமது முஸ்லீம் சகோதர சகோதரிகளுக்கு எனது நல்வாழ்த்துக்களை  தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த புனித ரமலான் மாதத்தில் நோன்பிருந்து சிறப்பு வழிபாடு நடத்துகிறார்கள். ரமலான் மாத நிறைவில் ரம்ஜான் கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையின் போது,  ஏழைகளுக்கு உணவு மற்றும் உணவு தானியம் வழங்குவதும் சிறப்பு அம்சமாக உள்ளது. இந்த விழா இணக்கமான, அமைதியான, வளமான, சமூகத்தைக் கட்டமைப்பதற்கு பாடுபட மக்களை ஊக்கப்படுத்துவதாக உள்ளது.

புனிதமான ரம்ஜான் பண்டிகையின்போது மனித குலத்திற்கு சேவை செய்வதற்கும் ஏழைகள் மற்றும் நலிந்த மக்களின்  வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும் நம்மை அர்ப்பணிக்க  உறுதியேற்போம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு இதயப்பூர்வ நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதாக கூறியுள்ளார்.

ரம்ஜான் பண்டிகை உண்மையான அர்ப்பணிப்பு, அறக்கொடை மற்றும் எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி தெரிவிப்பதன் கொண்டாட்டமாகும்.

இந்தப் பண்டிகை தாராள உணர்வை வலுப்படுத்துவதுடன், மக்களிடம் ஒருவருக்கொருவர் நெருக்கத்தை ஏற்படுத்துவதோடு, அவர்களிடையே நட்புறவு, சகோதரத்துவம், அன்பு மற்றும் பரஸ்பர மரியாதையை ஏற்படுத்தும் என்று நான் நம்புகிறேன்.

ரம்ஜானுடன் தொடர்புடைய இதுபோன்ற புண்ணிய மற்றும் புதுமையான சிந்தனைகள் நமது வாழ்க்கையில் அமைதி, நல்லிணக்கம் மற்றும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி தமது டுவிட்டர் பதிவில் அனைவருக்கும் ரம்ஜான் நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.  இந்த பண்டிகை நமது சமூகத்தில் ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தின் உணர்வை மேம்படுத்தும் என்று நம்புகிறேன். அனைவரும் நல்ல ஆரோக்கியம் மற்றும் செழிப்புடன் ஆசீர்வதிக்கப்படட்டும் என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.