Tamilசெய்திகள்

இன்று முதல் 9 நாட்களுக்கு அதிமுக நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபடும் எடப்பாடி பழனிசாமி

பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தோல்வியடைந்ததைத் தொடர்ந்து கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

தே.மு.தி.க. உள்ளிட்ட சில கட்சிகளோடு கூட்டணி அமைத்து போட்டியிட்ட அ.தி.மு.க. தேர்தலில் பின்னடைவை சந்தித்தது. பா.ஜ.க. கூட்டணி சில தொகுதியில் இரண்டாம் இடத்தை பிடித்ததால் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனி சாமி மீதும் எதிர்ப்பாளர்கள் குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளனர்.

அ.தி.மு.க.வில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள அனைவரையும் மீண்டும் சேர்த்து கொண்டால் மட்டுமே அ.தி.மு.க. பழைய நிலைக்கு திரும்பி வலுப்பட வாய்ப்பு இருப்பதாகவும் அரசியல் நோக்கர்களும் கணித்துள்ளனர். இதைத் தொடர்ந்து பாராளுமன்ற தொகுதி வாரியாக கட்சியினர் மாவட்ட செயலாளர்கள் உள்பட முக்கிய நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி இன்று முதல் ஆலோசனை நடத்த உள்ளார்.

ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் இன்று மாலை நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் காஞ்சீபுரம், ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற தொகுதிகளை சேர்ந்த முக்கிய பொறுப் பாளர்கள் பங்கேற்கிறார்கள். அவர்களுடன் எடப்பாடி பழனிசாமி தேர்தல் தோல்வி பற்றி விரிவாக ஆலோசனை நடத்தி உள்ளார்.

நாளை முதல் வருகிற 19-ந் தேதி வரை தொடர்ச்சியாக 26 பாராளுமன்ற தொகுதிகளை சேர்ந்த அ.தி.மு.க. முன்னணி நிர்வாகிகள் மற்றும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள நிர்வாகிகளுடனும் ஆலோசனை நடத்த உள்ளார். நாளை முதல் 19-ந் தேதி வரை காலை 9 மணிக்கு தொடங்கும் ஆலோசனை கூட்டம் மாலை வரையில் நடைபெற உள்ளது.

ஒவ்வொரு நாளும் 3 தொகுதிகளை சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். இதன்படி நாளை (11-ந் தேதி) காலை 9 மணிக்கு சிவகங்கை பாராளுமன்ற தொகுதியினருடனும், 11 மணிக்கு வேலூர் நிர்வாகி களுடனும், மாலை 3.30 மணிக்கு திருவண்ணாமலை நிர்வாகிகளுடனும் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி கருத்துக்களை கேட்கிறார். எந்தெந்த தொகுதிகளை சேர்ந்தவர்கள் ஆலோசனை கூட்டங்களில் பங்கேற்கிறார்கள் என்பது பற்றிய விவரம் வருமாறு:-

12-ந்தேதி-அரக் கோணம் தஞ்சை, திருச்சி, 13-ந்தேதி-சிதம்பரம், மதுரை, பெரம்பலூர். 15-ந்தேதி- நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கிருஷ்ணகிரி. 16-ந்தேதி-ராமநாதபுரம், நெல்லை, விருதுநகர். 17-ந் தேதி-தென்காசி, தேனி, திண்டுக்கல். 18-ந் தேதி-பொள்ளாச்சி, நீலகிரி, கோவை. 19-ந்தேதி-விழுப்புரம், கன்னியாகுமரி, தர்மபுரி.

பாராளுமன்ற தேர்தல் தோல்விக்கான காரணம் என்ன? என்பதை கண்டறிய முடிவு செய்துள்ள எடப்பாடி பழனிசாமி கட்சியின் மேல்மட்ட நிர்வாகிகள் முதல் கீழ் மட்ட நிர்வாகிகள் வரையில் உள்ள அனைவரிடமும் கருத்துக்களை கேட்க உள்ளார். இதைத் தொடர்ந்து தொகுதி தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் தலைமை கழக செயலா ளர்கள், மாவட்ட செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் கள், முன்னாள் மாவட்ட செயலாளர்கள், பல்வேறு அணிகளின் நிர்வாகிகள், ஒன்றிய, பேரூராட்சி, பகுதி செயலாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளில் பொறுப்புகளில் உள்ளவர்கள் என அனைவரும் கூட்டத்தில் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி உள்ளார்.

இந்த கூட்டங்கள் முடிந்த பிறகு சென்னை உள்பட மீதமுள்ள தொகுதிகளை சேர்ந்த நிர்வாகிகளுடனும் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். இதன் பின்னர் தேர்தல் தோல்விக்கு காரணமான வர்கள் கண்டறியப்பட்டு அவர்கள மீது கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளார்.