Tamilசெய்திகள்

இன்று முதல் 6 கிரகங்கள் ஒன்று சேர்வதால் பரபரப்பு!

ஜோதிடத்தின்படி தனுசு ராசியில் இன்று (புதன்கிழமை) தொடங்கி 3 நாட்கள் (27-ந் தேதி வரை) சூரியன், சந்திரன், குரு, சனி, புதன் மற்றும் கேது ஆகிய 6 கிரகங்கள் ஒன்றாக சேர்ந்து ராகுவின் பார்வையை பெறுகிறது என்றும் இதன் மூலம் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் ஜோதிடர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

இதன் காரணமாக 12 ராசிக்காரர்களுக்கும் ஏற்பட போகும் மாற்றங்கள் குறித்து ஜோதிடர்கள் பலன்களை கணித்து வெளியிட்டு உள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

ஆனால் ஜோதிடர்களின் கருத்தை விஞ்ஞானிகள் நிராகரித்து உள்ளனர். “கோள்கள் இணைவதால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதற்கு அறிவியல் பூர்வமாக ஆதாரம் எதுவும் இல்லை” என்று சென்னை பிர்லா கோளரங்க இயக்குனர் சவுந்தரராஜன் தெரிவித்து உள்ளார்.

கோள்கள், சூரியனை தங்கள் சுற்றுப்பாதையில் சுற்றி வருகின்றன. இதுபோல கோள்கள் அவ்வப்போது ஒன்று சேருவது அவ்வப்போது நிகழும். இது பூமியில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்றும் அவர் தெரிவித்து இருக்கிறார்.

இப்போது 6 கிரகங்கள் ஒன்று சேருவது போல கடந்த 1962-ம் ஆண்டு பிப்ரவரி 3-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை ராகு தவிர மற்ற 8 கிரகங்கள் மகரராசியில் ஒன்று சேர்ந்தன. அப்போது உலகம் அழிந்து விடும் என்று ஒரு சில ஜோதிடர்கள் கூறியிருக்கிறார்கள். ஆனால் ஒரு சில ஜோதிடர்கள் அதனை மறுத்தும் இருக்கிறார்கள். என்றாலும் அந்த காலக்கட்டத்தில் கிரக சேர்க்கை அன்று கோவில்களில் இரவு முழுவதும் பூஜைகள் நடத்தி இருக்கிறார்கள்.

கிரக தோஷத்தால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க சென்னையில் நடிகை பானுமதி வீட்டில் யாகம் நடத்தி உள்ளார். நடிகை அஞ்சலி தேவி திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்திருக்கிறார். அப்போதைய அமைச்சர் பக்தவச்சலம் கோவில்களுக்கு சென்று நவகிரகங்களை சுற்றிவந்து சாமி தரிசனம் செய்துள்ளார்.

இந்த கிரக சேர்க்கையால் சினிமா கொட்டகைகளில் கூட்டம் குறைவாகவே இருந்திருக்கிறது, கடல் கொந்தளிக்க வாய்ப்பு உள்ளது என கருதி சென்னையில் மீனவர்கள் கடலுக்கு செல்லாமல், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம் என்று கடற்கரையை விட்டு விலகி சென்ற சம்பவங்களும் நடந்துள்ளன.

பெற்றோர்கள் குழந்தைகளை வெளியே விடாமல் வீட்டிலேயே வைத்து இருந்ததாகவும், ரெயில், பஸ்களில் கூட்டம் குறைவாக இருந்ததையும் ஊடகங்கள் செய்திகளாக வெளியிட்டு இருக்கிறது.

அந்த காலகட்டத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த பிரதமர் நேரு, ‘எதிர்காலத்தை அறிய நான் விரும்புகிறேன். ஆனால் இதற்காக ஜோசியத்தை நம்பத் தயாராக இல்லை. நம் தலையெழுத்தை நாமே உருவாக்குகிறோம், நம் எதிர்காலம் நம் கையிலேயே இருக்கிறது. நம் சொந்த செய்கைகளால், நம் எதிர்காலத்தை ஆக்கவும் முடியும் அழிக்கவும் முடியும். எட்டு கிரகம் சேருவது பற்றி பயப்படாதீர்கள். கிரகங்களில் நம்பிக்கை வைக்காதீர்கள். நம் தலை எழுத்தை இந்த கிரகங்கள் எழுதவில்லை. நம் தலை எழுத்தை நாமே தான் நிர்ணயித்து கொள்கிறோம்’ என்று கூறியிருக்கிறார்.

அப்போதைய குன்றக்குடி மடாதிபதியும், ‘எட்டு கிரகங்கள் சேருவதால் உலகம் அழியாது. இதுபற்றி கவலைப்படவேண்டாம். பயம் வேண்டாம் உலகத்துக்கு ஆபத்து எதுவும் இல்லை.’ என்று பொதுமக்களுக்கு நம்பிக்கை தரும் வகையில் கருத்து கூறியிருந்தார்

இப்போது 6 கிரக சேர்க்கையால் நடக்கப்போவது என்ன என்பது அடுத்த வாரத்தில் தெரிந்து விடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *