சீனாவின் உகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் தோன்றிய கொரானோ இன்று வரை உலக நாடுகளை ஆட்டிப்படைத்து வருகிறது.
பல லட்சம் பேரின் உயிரைப் பறித்த கொரோனா, பல கோடி மக்களின் வாழ்வையும் புரட்டிப் போட்டுவிட்டது. கண்ணுக்கு தெரியாத இந்த கிருமியால், கணக்கற்ற கஷ்டங்களை மக்கள் அனுபவித்துவிட்டனர், தொடர்ந்தும் அனுபவித்து வருகின்றனர்.
எனவே, கொரோனாவுக்கு அணை போட உலக நாடுகள் முனைப்பு காட்டுகின்றன. அதில் இந்தியாவும் முன்னணியில் இருக்கிறது.
கொரோனாவுக்கு எதிரான தடுப்புமருந்தை கண்டுபிடிக்கும் பணி நாட்டில் முடுக்கிவிடப்பட்டதுடன், பிற நாடுகள் கண்டுபிடித்த தடுப்பூசிகளை இந்தியாவில் தயாரிக்கும் பணியும் வேகம் எடுத்தது. அதற்கு மத்திய அரசு உரிய ஊக்கம் அளித்தது.
அதன் விளைவாக, ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம், இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சிலுடன் இணைந்து ‘கோவேக்சின்’ தடுப்பூசியை உருவாக்கியது.
அதேபோல இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், ஆஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனமும் இணைந்து உருவாக்கிய தடுப்பூசியை புனேயைச் சேர்ந்த சீரம் நிறுவனம் ‘கோவிஷீல்டு’ என்ற பெயரில் தயாரித்துள்ளது.
பல்வேறு கட்ட வெற்றிகரமான பரிசோதனைக்கு பின், இந்த தடுப்பூசிகளின் அவசர பயன்பாட்டுக்கு இந்திய தலைமை கட்டுப்பாட்டு அதிகாரி அனுமதி அளித்தார்.
அதைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 9-ந் தேதி உயர்மட்ட குழுவினருடன் ஆய்வு செய்தார். அதன் பின், ஜனவரி 16-ந் தேதி (இன்று) முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்தது.
முதல்கட்டமாக, சுகாதார பணியாளர்கள் மற்றும் கொரோனாவுக்கு எதிரான முன்கள பணியாளர்கள் சுமார் 3 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்படும். அடுத்ததாக 50 வயதுக்கு மேற்பட்டவர்கள், 50 வயதுக்கு உட்பட்ட நோயாளிகள் என சுமார் 27 கோடி பேருக்கு போடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
முன்கள பணியாளர்கள் 3 கோடி பேருக்கு தடுப்பூசி போடுவதற்கான செலவை மத்திய அரசே ஏற்பது குறிப்பிடத்தக்கது.
உலகிலேயே மிகப்பெரிய கொரோனா தடுப்பூசி திட்டத்தை இந்தியா இன்று தொடங்குகிறது.
இன்று முதல் நாடு முழுவதும் கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய 2 தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன. இந்த மாபெரும் திட்டத்தை இன்று பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.
தமிழகத்தில் கொரோனோ தடுப்பூசி போடும் பணியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மதுரையில் இன்று தொடங்கி வைக்கிறார்.
முதல்கட்டமாக அரசு, தனியார் மருத்துவமனை டாக்டர்கள், நர்சுகள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கும், மருத்துவம் சாரா பணியாளர்களுக்கும் தடுப்பூசி போடப்படும் என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
தமிழத்தில் 166 மையங்களில், 4 லட்சத்து 80 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.