Tamilசெய்திகள்

இன்று மாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம்

தமிழகத்தின் முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் இன்று காலை 9 மணிக்கு கவர்னர் மாளிகையில் பதவி ஏற்றார். அவருடன் 33 அமைச்சர்களும் பதவி ஏற்றனர். அதைத் தொடர்ந்து அவர் மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களுக்குச் செல்கிறார். பெரியார் திடலுக்குச் சென்று அங்குள்ள பெரியார் சிலைக்கு மாலையிட்டு மரியாதை செய்வதாகவும் கூறப்படுகிறது.

இப்படி சில நிகழ்வுகளுக்குப் பிறகு பகல் 12 மணிக்கு மேல் தலைமைச் செயலகத்திற்கு வந்து 3 முக்கிய கோப்புகளில் கையெழுத்திடுகிறார். அதில், கொரோனா நிவாரணத் தொகை ரூ.4 ஆயிரம் வழங்குவது, நகர பஸ்களில் மகளிருக்கு இலவச பயணம் ஆகிய திட்டங்கள் இடம் பெறுவதாகக் கூறப்படுகிறது.

அதைத் தொடர்ந்து மாலை 4 மணிக்கு அமைச்சரவையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டுகிறார். இந்த அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டமாக அது இருக்கும். அதில், கொரோனா பரவல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் பற்றி சில முடிவுகள் எடுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

அதைத் தொடர்ந்து மாலை 5 மணிக்கு மாவட்ட கலெக்டர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் கலந்தாலோசனை மேற்கொள்கிறார். இந்தக் கூட்டம் தலைமைச் செயலக வளாகத்தில் அமைந்துள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெறுகிறது.