மணிப்பூரில் இரண்டு பிரிவினருக்கு இடையிலான மோதல் வன்முறையாக வெடித்தது. இந்த வன்முறையில் 170 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது அமைதி நிலவி வருகிறது. புலம்பெயர்ந்தவர்களை, அவர்களது சொந்த இடத்தில் மீண்டும் அமர வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இன்று மணிப்பூர் சட்டசபை கூட்டம் நடைபெறுகிறது. இன்று ஒருநாள் மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மணிப்பூர் வன்முறை தொடர்பான விவாதம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, ஒருநாள் கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து குகி-ஜோமி பழங்குடியின அமைப்பு, கலந்து கொள்ளமாட்டோம் எனத் தெரிவித்துள்ளது. இந்த சமூகத்தினரை சேர்ந்த 10 எம்.எல்.ஏ.-க்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளமாட்டோம் என அறிவித்துள்ளனர்.
தற்போதைய சூழ்நிலையில் மெய்தி சமூகத்தினர் அதிகமாக வாழும் இம்பால் பகுதிக்கு செல்வது பாதுகாப்பனது அல்ல எனத் தெரிவித்துள்ளனர். சட்டமன்றம் இம்பாலில்தான் உள்ளது. நாகா எம்.எல்.ஏ-க்கள் கலந்து கொள்ள வாய்ப்புள்ளது. சட்டசபை கூட்டத்தை நடத்த தடைவிதிக்க குகி-ஜோமி சமூகத்தினர் கவர்னருக்கு வேண்டுகோள் விடுத்த நிலையில், அரசு அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டது. பிப்ரவரி- மார்ச் மாதத்தில் பட்ஜெட்டிற்கு செசனுக்காக சட்டமன்றம் கூடியது. அதன்பின் தற்போது ஒருநாள் கூட இருக்கிறது.