Tamilசெய்திகள்

இன்று நாடு முழுவதும் டாக்டர்கள் வேலை நிறுத்தம்!

மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவில் உள்ள என்.ஆர்.எஸ். அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் கடந்த 10-ந் தேதி உயிரிழந்ததால், அவரது உறவினர்கள் அங்கு பணியாற்றி வரும் 2 பயிற்சி டாக்டர்களை தாக்கினர். இதை கண்டித்து 11-ந் தேதி முதல் மாநிலம் முழுவதும் அரசு டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

டாக்டர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், அங்கு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் டாக்டர்களுக்கு ஆதரவாகவும் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் நாடு முழுவதும் கடந்த 14-ந் தேதி முதல் 3 நாட்கள் போராட்டங்கள் நடந்தன. இதன் தொடர்ச்சியாக நாடு முழுவதும் 17-ந் தேதி (இன்று) வேலைநிறுத்தம் நடத்தவும் இந்திய மருத்துவ சங்கம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.

அதன்படி இன்று (திங்கட்கிழமை) காலை 6 மணி முதல் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணி வரை டாக்டர்களின் வேலைநிறுத்தம் நாடு முழுவதும் நடைபெறுகிறது. இதன்மூலம் மருத்துவமனைகளில் புறநோயாளிகள் பிரிவு உள்ளிட்ட அத்தியாவசியம் இல்லாத பணிகளை டாக்டர்கள் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். ஆனால் அவசர சிகிச்சை மற்றும் விபத்து சிகிச்சைகள் வழக்கம் போல நடைபெறும் என இந்திய மருத்துவ சங்கம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.

மேலும், டாக்டர்கள் மீதான இதுபோன்ற தாக்குதல் நடத்துபவர்களுக்கு கடும் தண்டனை அளிக்கும் வகையில் நாடு முழுவதும் ஒரே சீரான சட்டத்தை மத்திய அரசு இயற்ற வேண்டும் எனவும் இந்திய மருத்துவ சங்கத்தின் அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.

அதேநேரம் டாக்டர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சட்டம் இயற்றுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்சவர்தன் கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே மேற்கு வங்காளத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் டாக்டர்கள் நேற்று 6-வது நாளாக தங்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். தலைமை செயலகத்துக்கு பேச்சுவார்த்தைக்கு வாருங்கள் என முதல்-மந்திரி மம்தா பானர்ஜி விடுத்த அழைப்பை நிராகரித்த அவர்கள், மூடிய அறைக்குள் நடைபெறும் பேச்சுவார்த்தையில் பங்கேற்க மாட்டோம் என அறிவித்து இருந்தனர்.

எனினும் நேற்று மீண்டும் தங்கள் ஆட்சிமன்ற குழுவை கூட்டி ஆலோசனை நடத்திய அவர்கள், பேச்சுவார்த்தைக்கான இடத்தை முதல்-மந்திரியே தேர்வு செய்யலாம் எனவும், ஆனால் அது திறந்த அரங்கமாகவே இருக்க வேண்டும் எனவும் கூறினர். குறிப்பாக மாநிலம் முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரிகளின் பிரதிநிதிகள் மற்றும் செய்தியாளர்கள் பங்கேற்கும் வகையில் மிகப்பெரிய இடமாக இருக்க வேண்டும் எனவும் அறிவித்து உள்ளனர்.

டாக்டர்கள் சங்கம் அறிவித்தபடி இன்று நாடு முழுவதும் வேலைநிறுத்த போராட்டம் தொடங்கியது.

டாக்டர்களின் இன்றைய வேலைநிறுத்தத்தால் நாடு முழுவதும் நோயாளிகள் கடும் துயரத்தை சந்திக்க நேரிடும் என தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *