Tamilசெய்திகள்

இன்று தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்படுகிறது

இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 1950ம் ஆண்டு ஜனவரி 25ம் தேதி ஏற்படுத்தப்பட்டது. இதை குறிக்கும் விதத்தில், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ம் தேதி தேசிய வாக்காளர் தினம் கொண்டாப்படுகிறது. தேசிய வாக்காளர் தினத்தின் முக்கிய நோக்கம், வாக்காளர்கள் சேர்க்கையை ஊக்குவித்தல், குறிப்பாக புதிய வாக்காளர்களை அதிக அளவில் சேர்ப்பதற்கு ஊக்கம் அளிப்பதுதான்.

வாக்காளர்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தேர்தல் நடைமுறையில் பங்கேற்பதை ஊக்குவிப்பதற்காகவும் இந்த நாள் பயன்படுத்தப்படுகிறது. அத்துடன், தேசிய வாக்காளர் தினத்தில், புதிய வாக்காளர்களுக்கு புகைப்படத்துடன்கூடிய அடையாள அட்டைகள் வழங்கப்படும்.

அந்த வகையில் 11வது தேசிய வாக்காளர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. டெல்லி அசோக் ஓட்டலில் நடைபெறும் வாக்காளர் தின கொண்டாட்டத்தை, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் காணொளி காட்சி மூலம் தொடங்கி வைக்க உள்ளார்.

நமது வாக்காளர்களை அதிகாரமிக்கவர்களாகவும், விழிப்புணர்வு மிக்கவர்களாகவும், பாதுகாப்பு மற்றும் தகவல் அறிந்தவர்களாகவும் ஆக்குவதே இந்த ஆண்டு தேசிய வாக்காளர் தினத்தின் கருப் பொருள் ஆகும்.